250 கிலோ எடையுள்ள கடல் பசு இறந்த நிலையில் கரையொதுங்கியது!

இராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் நேற்று(03) இறந்த நிலையில் கடல்பசு ஒன்று கரை ஒதுங்கியது.

மேலும் இந்த கடல் பசு 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும் 2.8 மீட்டர் நீளமும் 1.85 மீட்டர் சுற்றளவும் 250 கிலோ எடையும் கொண்டதாகும்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி இறந்தது குறித்து ஆய்வு செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாறையிலே மோதி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மண்டபம் கால்நடைத்துறை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கடல் பசுவை பிரேத பரிசோதனை செய்து கடற்கரை அருகிலேயே புதைத்தனர்.

கடல்பசு கரை ஒதுங்கியதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.