மெல்போர்ன் டெஸ்ட்: மிஸ்பாவிற்கு 40 சதவீதம் அபராதம்!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மேல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 624 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 165 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.

ஐ.சி.சி. விதிமுறையின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களை குறைவாக வீசியிருந்தார்கள். இதனால் அந்த அணியின் கேப்டன் மிஸ்பாவிற்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. விதிப்படி குறைவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.