பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேக நபரான இளைஞனை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், பிணை வழங்குதை எதிர்ப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளதால், சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சந்தேக நபருக்கு பிணை வழங்கிய நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.







