இயேசு அறிவித்த இறையாட்சி (விண்ணரசு) பற்றி நற்செய்தி நூல்கள்!

நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார்.

இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).

இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.

இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார்.

கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.

இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.

ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).

இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.

இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை – மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் – மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.