புலம்பெயர் தமிழர்கள் புலிகளா??

“டயஸ்போராவ” இந்த வார்த்தைகளை உச்சரிக்காத தென்னிலங்கை அரசியல் வாதிகளை இப்போதைய சூழ்நிலையில் அடையாளம் காண்பது கடினம்.

இதன் அர்த்தம் புலம்பெயர் மக்கள் ஒரு காலகட்டத்தில் தமிழர்கள் என்றாலே புலிகள் என்ற மாயைத்தோற்றம் இலங்கையில் காணப்பட்டது. அதே வகையிலேயே இப்போது புலம்பெயர் என்ற வார்த்தைகள் மாறிப்போய்விட்டன.

புலம்பெயர் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப்புலிகள் என்ற வாதத்தினை மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகளே இன்றைய இலங்கையின் நிலை.

ஒரு பொய்யோ அல்லது மெய்யோ மீண்டும் மீண்டும் மனதில் விதைக்கப்படும் போது அது ஓர் சங்கடத்திற்கு உரிய விடயமாக மாறிப்போய் விடும் என்பது தெரிந்த கதை.

புதிய அரசியல் யாப்பின் மூலம் இலங்கையில் ஓர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியம் என்பதே இப்போதைய அரசின் கனவு.

ஆனாலும் அதற்கு எதிரான சக்திகளின் புது வாதம் அந்த அரசியல் யாப்பே புலம் பெயர் தமிழர்களினால் உருவாக்கப்பட்டது என்பதே.

அத்தோடு இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் புலம்பெயர் தமிழர்களே என்ற நிலைப்பாடு இப்போது தொடர்ந்து வருகின்றது.

ஆரம்பத்தில் புலிகள்… புலிகள்… என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் புகுத்தி அரசியல் இலாபம் கண்டவர்கள் எல்லாம் இப்போது அதனோடு புலம் பெயர் தமிழர்களையும் இணைத்து விட்டார்கள்.

குறிப்பாக சமீபகாலத்தில் “வெட்டுவோம், அழிப்போம், பௌத்தம் அழிக்கப்படுகின்றது” என்று கதறியவர்கள் இப்போது புத்தரின் உண்மையான சிஷ்யகோடிகளாக மாறிப்போய் விட்டனர்.

இங்கு இவர்களுக்கு பிறந்த ஞானம் பணத்தாலா? அல்லது பதவியாலா? என்பதற்கு அவர்கள் மட்டுமே விடை கூற முடிந்த கேள்வி.

அதுமட்டும் இல்லாமல் விடுதலைப்புலிகள் தாக்கப்போகின்றார்கள் என்ற கருத்தை கொஞ்சமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புலம் பெயர் தமிழர்களையும், வெளிநாடுகளையும் பற்றிக்கொண்டு விட்டார்கள்.

ஆனாலும் பழைய சோற்றுக்கு ஊருகாய் போல புலிகள் கதைகளை அரசியல் தலைவர்கள் இன்று வரை மறக்கவில்லை. அதன் மூலமாகவே தமக்கு இலாபம் என்பதே தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் ஓர் கொள்கையும் கூட.

ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்தவர்கள் இப்போது ஹம்பாந்தோட்டையையும், திருகோணமலையையும் கொழும்பையும் காக்க புறப்பட்டு விட்டார்கள்.

அதேபோன்று அரசியல் யாப்பு வேண்டாம், அதனால் மீண்டும் இனவாதம் ஏற்படும் என்று அதற்காக புலம்பெயர் தமிழர்களையும் இணைத்து பேசி அரசியல் யாப்பிற்கு எதிராக மக்களை திசைதிருப்பிக்கொண்டு வருகின்றார்.

நன்று… இந்த பயணம் உண்மையான இலங்கையின் அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு இருந்தால் மட்டும், ஆனால் அந்த நோக்கம் இங்கில்லை என்பதே உண்மை.

இப்போது வாய்ச்சொல் வீரர்களை அப்படியே கொஞ்சம் மூன்று மாதங்களுக்குபின் சென்று அவதானித்து வந்தால் இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பிரச்சினைகள் வேண்டும் என்றே தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவாகும்.

ஆக மொத்தம் இலங்கையில் எவ்வகையிலாவது ஓர் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கவேண்டும் அதன் மூலமே அரசியல் ஆட்டங்களில் வெற்றிகள் கிடைக்கும்.

அதற்காக அப்பாவி பொதுமக்களின் அபிலாசைகளில் விளையாட்டு காட்டுவது எவ்வகையிலும் பொருந்தாத விடயம்.

சுற்றிச் சுற்றிச் சென்றால் இந்த பிரச்சினைகளின் அடி ஆட்சிமாற்றமே அப்படி நடந்து விட்டால், அதற்கு அடுத்த ஆட்சி மாற்றம் பெறும் வரை கூட பிரச்சினைகள் இல்லாமல் போகாது.

தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக இன்னொருவர் எரிய அதில் குளிர்காய நினைப்பவர்களை மனித வர்க்கத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

இலங்கையும் பிரச்சினைகளும் ஒரு தாய் பிள்ளைகளே, எப்போது ஓர் தன்னலம் அற்ற தலைவர் உதிக்கின்றாரோ அது வரையில் பிரச்சினையோடு வாழ்ந்து விட வேண்டியது இலங்கையரின் தலையெழுத்து.

இந்த அரசியல் ஆட்டங்களில் அடுத்து நடக்கப்போவது என்ன? அரசு எதிர்ப்பார்க்கும் நல்லிணக்கம் ஏற்படுமா? இதற்கு விடை நிச்சயம் இப்போதைக்கு அது கேள்விக்குறி.