ஆளும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது.அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை அப்படியே விட்டுவிட்டு,புதிதாக உருவாக்கப்படும் இணைப்பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகி அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சசிகலா செல்கிறார் என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தனக்கு அதிமுகவில் உள்ள ஒரு சில எதிர்ப்புகளையும் சமாளித்துவிட முடியும் என்று சசிகலா நம்புவதாக அ.தி.மு.க. சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் அவர் வகித்து வந்த தலைவர் பதவியைக் காலியாக வைத்துவிட்டு,தனது மரணம் வரையிலும் பொதுச் செயலாளராக மட்டுமே ஜெயலலிதா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு அவசர சிகிச்சைப் பிரிவில்,சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு 75 நாட்களாகத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.இந்த நிலையில் இந்த மாதம் 5ம் தேதி திடீரென அவர் மரணமடைந்தார்.இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரின் மரணம்.இந்தச் சூழ்நிலையில் தங்களது தலைவியை இழந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு இன்று நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இந்தப்பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் வற்புறுத்தி வந்தனர்.அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில், நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகள் என்று அனைவரும் போயஸ் கார்டன் சென்று நேரிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர்களும் நேரில் சசிகலாவுக்கு ஆதரவு அளித்தனர்.
இதனையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை உருவானது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் எம்.பி.சசிகலா புஷ்பாவின் கணவர்,கட்சியின் தலைமை அலுவலகம் சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தார்.அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கைகலப்பில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அவரை அங்கிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.இந்த நிகழ்வால் அ.தி.மு.க.வின் தலைமைக்கழக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த மாதிரியான எதிர்ப்புகளை சசிகலா தரப்பு விரும்பவில்லை என்றும் அதனால் இணைப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்சி விதி.இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழன்) காலை 9.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு, சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளது.
செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் பெறப்பட உள்ளது. ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செயற்குழு-பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







