கோவை சிங்காநல்லூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடந்தது.
இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு திராவிடர் 100 என்ற நூறு புத்தகங்களை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் திராவிடர் இயக்கங்கள் நீர்த்துப்போய் விட்டதாக ஒரு சிலர் பகல் கனவு காண்கின்றனர். ஆனால் திராவிடத்துக்கு அழிவு கிடையாது.
எண்ணற்ற பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். அவர்களின் வீரம், தியாகங்களை பதிவு செய்ய சிலர் விட்டு விட்டனர். அதே வேளையில் மராட்டியத்தில் அரபிக்கடலில் வீரசிவாஜிக்கு ரூ.3600 கோடி செலவில் அந்த மாநில அரசு சிலை நிறுவ உள்ளது. அதற்காக அவர்களை நான் குறை கூறவில்லை. அதே போல தமிழகத்தின் கடந்தகால வரலாறுகளையும், நம் முன்னோர் செய்த தியாகங்களையும் பதிவு செய்வது நமது கடமையாகும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கிறது. இது நம் மொழி, பண்பாடுகளை அழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும். தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாகவும், நீதி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்க வேண்டும்.
எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.
ஈழ யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது வேறொரு பரிணாமத்தில் வலுப்பெற்று வருகிறது. அது ஆயுதம் தாங்கிய போராட்டமாக இருக்காது. தம் பக்கம் உள்ள நியாயங்களை உலக நாடுகளிடம் பதிவு செய்யும் வகையில் இருக்கும்.
திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைந்து இலங்கையில் தமிழ் ஈழம் அமைய பாடுபட வேண்டும். அங்கு ஈழம் அமைவதைப் பார்த்து விட்டு தான் என் கண்கள் மூடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் ஆறுச்சாமி, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







