தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். அவரது மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வெற்றிடம் யாருக்கு சாதகமாக அமையும்? எந்த கட்சியால் நிரப்ப முடியும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:-அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா சிறந்த மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைப் போல மக்களை கவர்ந்த தலைவர் இல்லை. அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அ.தி.மு.க.வில் தலைவர்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. 1967-க்கு பிறகு தமிழகத்தில் வலுவிழந்த தேசிய கட்சி தற்போது மக்களின் நம்பிக்கையை பெறப் போகிறது. மாநில அக்கறையுடன் கூடிய தேசிய கட்சியான பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை பெறும்.
தி.மு.க. 18 ஆண்டுகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் நதிநீர், இலங்கை தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளையும் தீர்க்க பாடுபடவில்லை. எனவே அவர்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று மக்கள் நம்பவில்லை. பா.ஜனதா ஆளுகின்ற மாநிலங்களில் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாநில அக்கறையுடன் செயல்படும் பா.ஜனதாவுக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.
மாற்றத்தை பா.ஜ.க. உருவாக்கும். வெற்றிடத்தை வெற்றியால் நிரப்புவோம்.
கேள்வி:-ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், தமிழகத்தில் மோடி ஆட்சியை அமைப்போம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. முன் வைத்த கோஷம் என்ன ஆனது?
பதில்:-நிச்சயமாக இருக்கிறது. வரும் ஜனவரி 14-ம்தேதியில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த இருக்கிறோம். இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. இதுவரையில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து இருக்கிறார்கள். உறுப்பினர் அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இடைத்தேர்தல், கட்சி அமைப்பு ரீதியான தேர்தல்களை சந்திக்க வேண்டிய நிலை வந்தது. கட்சியின் கட்டமைப்பு பணிகளில் அக்கறை எடுத்துக்கொண்டோம். கண்டிப்பாக நாங்கள் அந்த லட்சியத்தை அடைவோம். தமிழகத்தில் மோடி ஆட்சியை அமைப்போம்.
கேள்வி:-சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெற்று இருக்கிறதே? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-ரொம்ப சந்தோஷமாகவே பார்க்கிறோம். பா.ஜனதா தொண்டர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் உத்வேகத்தை அளித்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது ஒரு கட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றால் அது பா.ஜ.க. தான் என்பதை நாங்கள் சொல்லிக்கொண்டிருந்ததை தேர்தல் முடிவு உறுதிப்படுத்தியது. பா.ஜ.க. தமிழகத்தில் துளிர் விட ஆரம்பித்து இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் கிடையாது. வளர்ச்சி திட்டங்கள். தமிழகத்தில் வேரூன்றுவதற்கான கால கட்டம் கனிந்து வந்திருக்கிறது.
கேள்வி:-சினிமாதுறையிலும், அரசியலிலும் சாதனை படைத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல் சினிமாவில் இருந்து இனி தலைவர்கள் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:-சினிமாவில் இருந்து தலைவர்கள் தோன்றுவது இனி குறைந்து விடும் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்களுக்கு நாட்டு நடப்பை சொல்ல ஊடகம் வந்து விட்டது. மக்கள் தெளிவான முடிவை எடுக்கும் காலகட்டம் இது. அன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்கு தொடர்பு என்பது திரைப்படங்களாகத் தான் இருந்தது. இப்போது தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மாநிலத்திற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கருப்பு பண ஒழிப்பை பாமர மக்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் தங்களுக்கான நல்ல திட்டங்களை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களை சார்ந்து தான் வெற்றி இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இனி தமிழகத்தில் யாரும் மாய தோற்றத்தால் வெற்றி பெற முடியாது என்பதை மக்கள் உணர்த்த தொடங்கி விட்டார்கள். தலைவர்களும் உணர தொடங்கி விட்டார்கள்.
கேள்வி:-ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை திடீரென்று பாராட்ட தொடங்கி இருக்கிறாரே?
பதில்:-இதை கூட்டணிக்கான அடித்தளமாக நான் பார்க்கவில்லை. வைகோ எங்களை ஆதரித்து கருத்து சொன்னதற்கு நன்றி. அதே நேரத்தில் அவர் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் பேசி விடுகிறார். மோடியை அவர் விமர்சனம் செய்யும்போது எங்களுக்கு அது கவலையை தருகிறது. இப்போது அவர் பாராட்டுவது பாராட்டின் ஒரு பகுதி. இதை இன்னொரு தலைவரின் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்.
கேள்வி:-2017-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு எத்தகைய ஆண்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்:-2017-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் ஆண்டாக இருக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் 3 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது அவநம்பிக்கையாக போய் விட்டது. அதன்பின்பு வந்த இடைத்தேர்தல் எங்களுக்கு நம்பிக்கையை தந்து இருக்கிறது. மக்கள் எங்களை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நினைக்க தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார்கள்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை பலம் உள்ளதாக மாற்றி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றியை ஆரம்பிப்போம். பாராளுமன்ற தேர்தலில் வென்று, 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக திகழ்வோம்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.







