பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்த முடியும்!

பொலிஸ் அதிபரின் தீர்மானம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை செய்யப்பட முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் எடுத்த தீர்மானம் தொடர்பில் எந்தவொரு ஊடக அமைப்பும் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்தால், அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட முடியும் என ஆரியதாச குரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கை குறித்து சில ஊடக நிறுவனங்கள் தம்மிடம் குறிப்பிட்டதாகவும், எழுத்து மூல முறைப்பாடு ஒன்றின் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது, எனவே பொலிஸ் மா அதிபரின் தீர்மானம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் பொலிஸ் நிலையங்களுக்கு பதிவாகும் விபத்துக்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான விபரங்கள் நாள்தோறும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

எனினும், அண்மையில் பொலிஸ் மா அதிபர் எடுத்தத் தீர்மானத்தை தொடர்ந்து தகவல் வழங்கும் நடவடிக்கையானது அரச ஊடகங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.