ஒடிசா மாநிலம் சண்டிபுரில் இந்திய ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதம் நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. போர் விமானத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகத்துல்லியமாக ரேடார் மூலம் கணித்து வெடிகுண்டு மூலம் தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஆயுதம்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் 120 கிலோ எடை கொண்டது. ஆயுதத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தயாரிக்க மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு ரூ.56 கோடியே 58 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஏற்கனவே கடந்த மே மாதம் இது சோதனை செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.