ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சரியான முறையில் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிமுகவில் இணைவேன், அப்போது எனக்கும், சசிகலாவுக்கும் தான் போட்டி என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை, அவரின் நெருங்கிய தோழியான சசிகலா தான் ஏற்கவேண்டும் என்று அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவரோ இது குறித்து எந்த ஒரு பதிலும் அறிவிக்கவில்லை. இது ஒரு புறம் இருந்தாலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கும் ஒரு புறம் இருந்து ஆதரவுகள் பெருகிக் கொண்டு வருகின்றன. இதனால் சசிகலாவா, தீபாவா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் வந்த போது என்னை சசிகலா தரப்பு உள்ளே அனுமதிக்கவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ராஜாஜி மகாலில் வைத்துதான் சிறிது நொடிகள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டேன் என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.
சசிகலா எப்படி ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஆக முடியும் . நான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நான் ஏன் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இருக்க கூடாது. சரியான முறையில் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிமுக வில் இணைவேன்.
அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை. மக்களின் விருப்பத்தால் தான் நான் அரசியலுக்கு வருவேன். எனக்கும் சசிகலாவுக்கும் தான் போட்டி. சசிகலா முடிவை பொறுத்தே எனது முடிவு இருக்கும். எனக்கு பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.