நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோவில் இவர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்றனர். மேலும், கிராமத்திற்குள் புகுந்து பொருட்களை சூறையாடி மக்கள் கடத்திச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
அப்குதியில் உள்ள சாம்பிசா காட்டுப்பகுதியில் சுமார் 1300 சதுர கி.மீட்டர் அளவிற்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். இந்த பகுதி போகோ ஹராம் கோட்டையாக விளங்கியது.
நைஜீரியா அரசு இப்பகுதியில் அதிரடி ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி கடந்த 14-ந்தேதி காட்டுக்குள் ராணுவம் நுழைந்தது. கண்ணில் படும் தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்த அவர்கள், பிணைக்கைதிகளாக வைத்திருந்த அப்பாவி பொதுமக்களை காப்பாற்றினார்கள்.
கடந்த 14-ந்தேதி தொடங்கிய வேட்டை நேற்றுவரை நடைபெற்றது. ஒரு வாரமாக நடைபெற்ற ராணுவ வேட்டையில் 1880 பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 564 போகோ ஹராம் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 20 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழ்ந்துள்ளனர். 2.6 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.







