சுழற்பந்தில் எங்களை விட இந்தியா வலிமையானது: தோல்வி குறித்து கூக் கருத்து!

சேப்பாக்கம் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தும் தோற்றதால் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் கூக் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். தோல்வி குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

இந்திய அணி வெற்றி பெற அனைத்து தகுதியும் இருக்கிறது. பேட்டிங்கின் போது முக்கியமான வாய்ப்புகளை தவற விட்டோம். அதற்காக இந்திய அணி எங்களை சரியாக தண்டித்து விட்டது. இந்திய மண்ணில் விளையாடுவது என்பது சவாலானதே.

எங்களது சுழற்பந்தை விட இந்தியாவின் சுழற்பந்து வீச்சு மிகவும் வலிமையானது. இந்த ஆடுகளத்தில் ஜடேஜா மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்.

தொடரை இழந்ததற்கு வேறு விதமான காரணம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கேப்டன் பதவி குறித்து நான் எதுவும் முடிவு செய்யவில்லை. இது சரியான நேரம் இது இல்லை. இங்கிலாந்து அணியின் தேவை பற்றி அறிந்து அதற்கு ஏற்ற வகையில் முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூக் தலைமையில் கடந்த முறை இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் தொடரை வென்று சாதித்தது. தற்போது ஒரு டெஸ்டிலும் வெல்ல முடியாமல் 0-4 என்ற கணக்கில் தொடரை மோசமாக இழந்துள்ளது.