யாழ். குடாநாட்டில் புகையிலைச் செய்கையை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது புகையிலைச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன், ஊரெழு. உரும்பிராய், உள்ளிட்ட பல பகுதிகளிலும், தீவகத்தின் பல பகுதிகளிலும் புகையிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புகையிலைப் பயிர்ச் செய்கைக்கான நாற்றுக்களை விவசாயிகள் வடமாராட்சியின் பொலிகண்டி, திக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்வதோடு நாற்று ஒன்றை இரண்டு ரூபா முதல் நான்கு ரூபா வரை கொள்முதல் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ். வலிகாமம் பிரதேசத்தில் வருடாந்தம் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்ற போதும் இவ் வருடம் புகையிலைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
நாட்டில் புகையிலைச் செய்கை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் முற்றுமுழுதாகத் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள நிலையில், சமூக மட்டத்திலுள்ள பல அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாகவே யாழில் புகையிலைச் செய்கையில் இவ்வருடம் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பணப் பெயர் என யாழ்.மக்களால் அழைக்கப்படும் புகையிலைச் செய்கையை விவசாயிகள் தவிர்த்து மாற்றுப் பயிர்ச் செய்கைகளில் நாட்டம் செலுத்த வேண்டுமெனில் அரசாங்கம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே புகையிலைச் செய்கையாளர்களின் கோரிக்கையாகவுள்ளது.







