மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மிட்னாபூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கொலாகட் நகரில் நேற்று நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும்போது மத்திய அரசை மீண்டும் தாக்கினார்.
அவர் ஆவேசமாக கூறியதாவது,
பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆகும். இதை நாங்கள் ஆயிரம் தடவை சொல்வோம். இதில் என்ன பேரம் என்பது எங்களுக்கு தெரிந்தாகவேண்டும்.
உங்களுக்கு (மோடி) சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள். எங்கள் அத்தனை பேரையும் கைது செய்தாலும் கூட பண மதிப்பை நீக்கியதற்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்புவதை உங்களால் தடுக்க முடியாது.
உயர் அதிகாரிகளை குறி வைத்து மாநில அரசுகளை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. எங்களது அரசு அதிகாரிகள் மீது கை வைக்க முயன்றால் சும்மா விடமாட்டேன். உங்களிடமும் சட்டம் உண்டு. அதேபோல் மாநில அரசுகளிடமும் சட்டம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.







