புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!

அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு அந்த நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒபாமா, இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உத்தியோகபூர்வாக ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த குறித்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல தமிழர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவிலுள்ள ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் தமிழ் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளை தடைசெய்துள்ளதால், வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் போதும் அமெரிக்காவிற்கு நாடு திரும்பும் போதும் பல அமெரிக்க தமிழர்களுக்கு வலிகள் ஏற்படுவதாக அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

பல மணி நேர குறுக்கு விசாரணைகளின் பின்னரே தாம் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் தமிழ் குழு கூறியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்கும் விடயத்தில் பரக் ஒபாமா, தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு தமக்கு உதவி புரியுமாறு அமெரிக்க தமிழர்கள் தம்மிடம் கோரியதாகவும் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கான தடையை நீக்கி, தமிழர்களுக்கு சிறிய நிம்மதியை ஒபாமாவினால் வழங்க முடியும் என ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் செயற்படாத ஓர் அமைப்பாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாடுகள் பதிவாகவில்லை எனவும் கூறியுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலை புலிகளை தொடர்ந்தும் நீடிப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை எனவும் ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளை நீக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் நடவடிக்கை எடுத்துள்ளதையும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்தும் நீடிப்பதற்கு ஏதுவான ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக 2014 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியிருந்த போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கண்டறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, தமிழர்கள் தொடர்பில் நியாயமாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுககு தண்டனை வழங்க கூடாது எனவும் கூறியுள்ளது.

இலங்கையின் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைக்கு ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியமை பாரியதொரு தவறு எனவும் ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புஷ் நிர்வாகத்தின் இந்த செயற்பாடு தமது வினைப்பயன் என தமிழர்கள் கருதுவதாகவும் குறித்த புலம்பெயர் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.