முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தும் தோல்வி: இங்கிலாந்தின் மோசமான சாதனை!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜடேஜாவின் சுழலில் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து மோசமான சாதனையில் முதல் இடம் பிடித்துள்ளது. முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் (477 ரன்கள்) குவித்து இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததில் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு முன் 2001-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுதான் இதுவரை முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து தோல்வியடைந்த மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2004-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 407 ரன்கள் குவித்தும், இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

1930-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 405 ரன்கள் எடுத்தும், இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

2011-ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

கடந்த 4-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்திருந்த நிலையிலும், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிட்டிருந்தது.