துப்பாக்கி சூடு எதிரொலி: துருக்கியில் உள்ள தூதரகங்களை மூடியது அமெரிக்கா!

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு  தாக்குதல் நடத்தினார்.

தூதரகத்தின் பிரதான வாயிலை நெருங்கிய அந்த நபர், துப்பாக்கியால் சுட்டதும், பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சண்டையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் அந்த மர்ம நபரை கைது செய்யப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்தான்புல் மற்றும் அதானாவில் உள்ள தூதரகம் மற்றும் துணை தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது.

துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி தொடர்ந்து உஷார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.