ரேணிகுண்டா வனப்பகுதியில் 23 தமிழர்கள் கைது!

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா வனப்பகுதியில் செம்மரம் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தப் பகுதியில் செம்மரம் கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பதி அருகே ரேணிகுண்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 23 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநில போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.

கைதான தமிழர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர்கள். 23 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை போளூர் பகுதி கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது.

கைதானவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.