முச்சதம் அடிக்க டிக்ளேர் முடிவு தள்ளிப்போனது: கருண் நாயர்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 303 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த முச்சதம் டிரிபில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று முச்சதம் அடித்து சாதனைப் படைத்துள்ள கருண் நாயர் கூறுகையில் ‘‘எனது வாழ்நாளில் இது மிகவும் சிறந்த ஆட்டமாக இருக்கும். ராகுல், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் களத்தில் விளையாடும்போது பல சூழ்நிலைகள் நிலவியது. அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் ஆதரவு என்னை தூண்டியது.

முதல் சதம் எப்போதுமே சிறந்ததாக இருக்கும். நான் முதல் சதத்தை அடிக்கும்போது எனக்கு எந்தவித நெருக்கடியையும் உணரவில்லை. சதம் அடித்தபின் நான் எனது வழக்கான ஷாட்டுகளை அடித்து விளையாடினேன். ஸ்வீப் செய்வது என்னுடைய வழக்கமான விளையாட்டு. இதற்காக நான் ஏராளமான வகையில் பயிற்சி எடுத்துள்ளேன்.

என்னுடைய பெற்றோர்கள் கேலரியில் இருந்து எனது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். எனது தந்தை பெரும்பாலான போட்டிகளை நேரில் பார்ப்பார். இதனால் எனக்கு கூடுதல் நெருக்கடி ஏதும் இல்லை. போட்டியை பார்க்க வந்த அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் அவர்கள் பெருமைப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைய 3-வது செசனில் அதிரடியாக விளையாடியபோது வீரர்கள் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது. விரைவில் நாம் டிக்ளேர் செய்யப் போகிறோம் என்ற தகவல் அதில் இருந்தது. ஆனால், நான் 300 ரன்களை நெருங்கும்போது டிக்ளேர் முடிவை சற்று தள்ளி வைத்தார்கள். இதனால் அணி நிர்வாகத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ராகுல் ஒரு சிறந்த வீரர். அவர் விரைவில் 200 ரன்கள் அடிப்பார். 3-வது நாள் 4-வது நாள் என போகப்போக ஆடுகளம் மோசமாக மாறி வருகிறது. புதிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். தற்போது ஆடுகளம் சற்று டர்ன் ஆகிறது. நாளை அதிக அளவில் டர்ன் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.