உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவுக்கு 4-வது இடம்!

நாட்டில் அதிகரித்து வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் காற்று, சூரியசக்தி, உயிரி தொழில்நுட்பம் போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தியில் இருந்து மின் உற்பத்தியை அதிகப்படுத்த அரசு முயன்று வருகிறது.

அந்தவகையில் காற்றாலைகள், சூரிய மின்சக்தி கூடங்கள் போன்றவை வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2½ ஆண்டுகளில் காற்றாலை மூலம் 7.04 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து உள்ளது.

இதைப்போல சூரியசக்தி மின்தகடுகள் மூலமாக 5.8 ஜிகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 31-ந் தேதிப்படி நாட்டில் 8,727.62 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியசக்தி மின் உற்பத்திக்கூடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இத்தகைய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் 40 சதவீத மின்தேவையை எட்டிவிட முடியும் என ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் தொடர்பான சட்டப்பூர்வ மாநாட்டில் இந்தியா உறுதியளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.