கருப்புப் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவில்லை: அருண்ஜெட்லி சொல்கிறார்!

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு கருப்புப் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அருண்ஜெட்லி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான மதிப்பீடு எதுவும் இல்லை. ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு அல்லது பின்பு கருப்புப் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை.

கருப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு எடுத்த முடிவு முக்கியமானது. இதில் துணிச்சலான முடிவு எடுக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது.

இது நீண்ட நாட்கள் கழித்து பெரிய அளவில் பலன் தரும். தற்போதைய பிரச்சினை நீண்ட நாட்களுக்கு இருக்காது. ரிசர்வ் வங்கி இதை விரைவில் தீர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.