அதிகார வரம்பை மீறி செயற்படுகிறார் வடக்கு ஆளுநர்: ரவிகரன் குற்றச்சாட்டு!!

வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினல் குரே அண்மைக்காலமாக அதிகார வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகளில் எதேச்சை அதிகார தலையீடு செய்வதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அணியினருடன் நேற்று சிறப்பு சந்திப்பை ஏற்படுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்மாதம் 09 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் ஆளுனரால் நடாத்தப்பட்ட காணி பிணக்குகள் மீதான விசாரணையானது ஒரு தலைப்பட்சமாக நடைபெற்றிருப்பதானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்.

வடக்கு மாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் இரண்டு வருடங்களில் தீர்க்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைய காணி அமைச்சினால் 2013/01 இலக்க சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சுற்று நிரூபத்தின் படி பிரதேசச் செயலாளர் ஒருவரால் தீர்த்து வைக்கப்பட முடியாத காணி பிணக்குகள் காணி ஆணையாளர் நாயகம், காணி அமைச்சின் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளால் நடாத்தப்படும் நடமாடும் சேவை ஒன்றின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

இந்நிலையில் காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம், அரசகாணிச்சட்டம் போன்ற அரசகாணிகளின் நிர்வாகம் தொடர்பான சட்டங்களை நன்கு அறிந்த அதிகாரிகளால் 2013/01 சுற்று நிரூபத்தின் படி நடமாடும் சேவையில் காணி பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது.

பின்னர் ஆளுனரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி முரண்பாடான முடிவுகள் வழங்கப்பட்டிருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசு இது தொடர்பில் போதிய கவனம் எடுக்க வேண்டும் சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்ட இத்தீர்ப்புகளை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.