அணி தோற்றால் தலைவரை விமர்சிப்பது வாடிக்கை : குக் சாடல்!

இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டயர் குக் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் எங்களது சில முடிவுகள் தவறாக அமைந்து விட்டன. ஆனால் களத்தில் எங்களது முழுமுயற்சியை வெளிப்படுத்துவதில் எந்தவித குறையும் வைக்கவில்லை. அணி தோற்றால் அணித்தலைவர் குறித்து விமர்சிப்பது விளையாட்டின் ஓர் அங்கமாகும்.

இந்திய அணி தோல்வி கண்டு இருந்தால் விராட்கோலியை விமர்சித்து இருப்பார்கள். எங்கள் அணி தோல்வி அடைந்ததால் என் மீது விமர்சனம் எழுந்து இருக்கிறது. ஆட்டத்தில் எல்லாம் நன்றாக இருந்தால் பிரமாதம் என்பார்கள். அதற்கு நேர்மாறாக போனால் மோசம் என்று வர்ணிப்பார்கள். எல்லா விளையாட்டுகளிலும் கேப்டன்களுக்கு இப்படி ஒரு நிலை வருவது வாடிக்கையானது தான்.

சென்னை ஆடுகளத்தை (பிட்ச்) பார்க்க நன்றாக இருக்கிறது. ஆடும் போது அதன் தன்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நிலக்கரி தணல் மூலம் பிட்ச் உலரவைத்ததை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கடந்த சில வருடங்களாக விராட்கோலி பேட்டிங்கில் கலக்குகிறார். அவரை போன்று எங்கள் அணியில் ஜோரூட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இது எனது 140-வது டெஸ்ட் போட்டி ஆகும். வலைப்பயிற்சியில் (புயலால் வலை பயிற்சி ரத்து செய்யப்பட்டது) ஈடுபடாமல் நான் களம் காணும் முதல் டெஸ்ட் போட்டி இது தான்’ என்றார். சாதனையின் விளிம்பில் உள்ள 31 வயதான அலஸ்டயர் குக், 2 ரன் எடுத்தால் டெஸ்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த 10-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.