யாழ்ப்பாணத்துக்கு ஒரு நீதி…? ஹம்பாந்தோட்டைக்கு ஒரு நீதியா..? மகிந்த புலம்பல்!

யாழ்ப்பாணத்தில் கடற்படையைச் சேர்ந்த இருவரை அங்குள்ளவர்கள் தடுத்து வைத்திருந்தபோதும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர்களை மீட்பதற்கு கடற்படை அனுப்பப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் நடைபெறும் ஆட்சி முறை பற்றி தற்போது அனைவருக்கும் நன்கு தெரியும். நாட்டில் தற்போது ஸ்திரத்தன்மை இல்லை.

அவ்வாறான கால கட்டத்திலேயே நாம் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மேலும் தற்போது பொலிஸ் ஆட்சியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜனநாயம் பற்றிப்பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றனர். கடந்த கால மோசடிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துக்கொண்டு மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

மேலும் நாட்டின் பொருளாதார நிலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளது. தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உள்ள தொழில்வாய்ப்புகளையும் இல்லாமலாக்குகிறது.

தொடர்ச்சியாக தொழிலாளர்களின் உரிமைகளை நீக்கிக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு போராடும் போது அதற்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் வழங்காது கடற்படையினரைக்கொண்டு கட்டுப்படுத்துகின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பபட்ட தாக்குதலை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. இதற்கு முன்னர் இவ்வாறு கடற்படையினரைக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்திய சந்தர்ப்பங்கள் பதிவாகவில்லை.

நாட்டில் போர் இல்லை, வேறு விதமான அச்சுறுத்தல்களும் இல்லை எனக்கூறிக்கொண்டே அரசாங்கம் படை முகாம்களை அகற்றுகிறது. அவ்வாறெனில் ஆர்பாட்டக்காரர்களை ஏன் கடற்படையைக்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.என்று கேள்வி எழுப்பினார்.