பிரதமர் தனது அதிகாரத்தை அதிகரிக்க முயற்சி: தே.சு.முன்னணி குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்க 2002ஆம் ஆண்டு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் மூலம் முதலாளித்துவத்திற்கு தேவையான வகையில் நாட்டுக்கு ஏற்படுத்த முயற்சித்த மாற்றங்களை செய்ய முடியாது போனதால், எதிர்வரும் நாட்களில் புதுமையான சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்து மீண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ள பொருளாதார அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக முழு அரச சேவையையும் பிரதமர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

துறைமுகம், சுற்றுலா, வனஜீவராசிகள் மற்றும் முதலீட்டு சட்டமூலங்களை அடிப்படையாக கொண்டு பணிகளை தனது ஆளுகைக்குள் கீழ் கொண்டு வர முடியும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரங்களும் இதன் மூலம் பிரதமருக்கு கிடைக்கும். மாகாண சபைகளின் அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படலாம்.

தற்போது ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரிகளை கூட பிரதமர் தனது கைகளுக்கு எடுக்கலாம். இது ஜனாதிபதியை மீறி செல்ல முயற்சிக்கும் சர்வ அதிகாரம் கொண்ட சட்டமூலம்.

சட்டத்தில் தண்டனையில் இருந்து தப்புவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது.

எனினும் பிரதமர் இந்த சட்டமூலத்தின் ஊடாக அந்த அதிகாரத்தை தனது சகாக்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகிறார்.

இந்த சட்டமூலம் அமுலுக்கு வந்தால், அமைச்சர்கள் வெறும் பொம்மைகளாக மாறிவிடுவார்.

ஜனாதிபதியும் பொம்மையாகி விடுவார். இதன் மூலம் கொட்சில்லா போன்ற புதுமையான நிர்வாகம் ஒன்று உருவாகும் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.