தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி அவரது உடலை எரித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் புதைத்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும்.
இதற்கான காரணம் குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் சில முக்கிய காரணங்களை இதன் பின்னணியில் குறிப்பிட்டனர்.
முதல் காரணம், முதல்வராக பதவியில் இருந்தபோதே மரணமடைந்த தமிழக முதல்வர்கள் மொத்தம் மூன்று பேர்.
அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாதான். பதவியிலிருந்தபோதே காலமான மற்ற இரு முன்னோடிகளையும் புதைத்துள்ளனர். அதேபோல ஜெயலலிதாவின் பூத உடலையும் புதைப்பதே முறை என்பதால்தான் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு ஒரு நிர்வாகி கூறினார்.
ஆனால் வேறு சில காரணங்களை அடுக்குகிறார்கள் வேறு சில நிர்வாகிகள். அதில் ஒரு முக்கியமான காரணம், மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி அருகேயே ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்க வேண்டும் என்பதே இயல்பான அதிமுகவினர் விருப்பம்.
ஜெயலலிதாவும் கூட ஒருவேளை அதையே கடைசி விருப்பமாகவும் கூறியிருக்க கூடும். இதற்காக ஜெயலலிதாவின் உடலை எரித்து அஸ்தியை கொண்டு அங்கு சமாதி எழுப்பியிருக்கலாம்தான். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.
ஜெயலலிதாவின் பூத உடலை எரித்து சாம்பலாக்க பெசன்ட்நகர் அல்லது மைலாப்பூரிலுள்ள மின் மயானத்தைதான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், அவரது உடலை அவ்வளவுதூரம் கொண்டு செல்வதில் பாதுகாப்பு சிக்கல், டிராபிக் நெருக்கடி, மக்கள் கூட்டத்தால் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உருவாகும் என்பதால் பூத உடலை புதைக்க முடிவு செய்தனர் என்று கூறினார் ஒரு அதிமுக நிர்வாகி.