அம்பாறையில் 20 எச்.ஐ.வி. நோயாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஒட்டு மொத்தமாக சுமார் 647 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். இதில் அம்பாறையில் 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

திருக்கோவிலில் இடம்பெற்ற எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியிலும் ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இன்று(01) அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு எயிட்ஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பான நிலையிலுள்ளது. எனினும் இலங்கையில் 647 பேர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையை பொறுத்தமட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஓர் உயர்வான இடத்தில் இருக்கின்றது.

இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகவே தொற்றியுள்ளது. இதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 20 பேருக்கு ஏயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றமையால் நாம் விழிப்பாக வாழ வேண்டும். எனவே நாம் எல்லோரும் ஒரு தடவை இரத்தப் பரிசோதனைகளை செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.