மனைவிக்கு சிரமம் இல்லாமல் இரண்டு முறை பிரசவம் பார்த்த கணவர்..! அனுபவத்தை பகிர்ந்த தம்பதியினர்..!

காரைக்குடியில் வசிக்கும் கார்த்திகேயன்- மஞ்சு தம்பதியினர்தான் இந்த துணிச்சலான காரியத்தினைச் செய்திருக்கிறார்கள்.

அதுவும் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்களையும் தன் கணவனையே பிரசவம் பார்க்க அனுமதித்திருக்கிறார் பி.எஸ்.சி படித்துள்ள மஞ்சு!

தங்களின் முதல் மகனை ஒரு தனியார் மருத்துவமனையிலேயே பிரசவித்துள்ளனர்.

இரண்டாவது பையன் வயிற்றில் எட்டு மாதமாக இருந்தபோது மனைவிக்கு மஞ்சள் காமாலை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், தொடர்ந்து மாத்திரை மருந்து ஸ்கேன் என அளவற்ற செலவு செய்த இவர்களை ஒரு கட்டத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கச் சொல்லியுள்ளனர்.

வயிற்றில் இருக்கும் பச்சைக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு மருந்து மாத்திரைகள் என நொந்து போன கணவன், நாட்டு மருத்துவர்களிடம் கேட்டபோது “இது ஒன்றும் பெரிய விசயமல்ல… இந்த உணவு முறைகளைப் பின்பற்றினால் சரியாகிவிடும்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பிறகு ஆங்கில மருத்துவர்களிடம் செல்லாமல் தமிழ் மருந்துகளையும், நல்ல உணவு முறைகளையும் பின்பற்றிய இவர்கள், இந்த இரண்டாவது பிரசவத்தினை பழைய முறைப்படி வீட்டிலேயே பார்க்க எண்ணி வயதான பெண்களிடம் உதவி நாடினர்.

ஆனால், அவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளாமல் போகவே, கார்த்திகேயன், தானே தன் மனைவிக்கு பிரசவம் பார்க்கத் தயாரானார்.

வீட்டிலுள்ளவர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே தானே நல்ல முறையில் பிரசவம் பார்த்தார்.

மஞ்சள் காமாலை ஆபத்து என்றும் அறுவைச் சிகிச்சையே சிறந்தது என்று மிரட்டிய ஆங்கில மருத்துவத்தின் முன்னால், தாயும் சேயும் நலமுடன் இருப்பதுடன், இப்போது அந்தப் பையனுக்கு இரண்டு வயதாகிவிட்டது.

அடுத்ததாக தன் மனைவி கர்ப்பமுறவே, மூன்றாவதாக, சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் உள்ள பெரியவர்களின் முழுச் சம்மதத்துடன், கார்த்திகேயன் பிரசவம் பார்க்க, ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது.

இதுகுறித்து கார்த்திகேயன் சொல்லும்பொழுது “பிரசவம் பார்ப்பது என்றால் என்ன” “சுகப்பிரசவம் என்பது தானாக தண்ணீர்குடம் வெளிவந்து,

தானாக அது உடைந்து, குழந்தையின் தலை வெளியில் வரும்போது அந்தக் குழந்தையைப் பிடித்து தூக்கி சுத்தம் செய்வது…

அதாவது தானாக பிரசவம் நடப்பதைப் பார்ப்பது… அதனால்தான் அறுவைச் சிகிட்சை செய்தவர் யாரென்றும்,

சுகப்பிரசவத்தினை “பிரசவம் பார்த்தது” யாரென்றும் கேட்கிறோம்” என்றார்.

மேலும் பழந்தமிழர் முறைப்படி, தொப்புள் கொடியினை உடனே அறுக்காமல், சிலமணி நேரம் வைத்திருப்பதால்,

அக்குழந்தைக்கு நினைவாற்றல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாகவும் சொல்கிறார்.

அவரது மனைவியிடம் கேட்டபோது “நர்சுகள் படுத்தும் பாட்டினைவிட என் கணவர் அருகிலிருந்து பிரசவம் பார்த்தபோது எனக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருந்தது” என்கிறார்.