யாழில் நால்வர் அதிரடி கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த சந்தேகத்திலேயே இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உந்துருளி திருத்தகம் ஒன்றை நடத்தி வரும் நபர் என்றும், அவருடைய வேலைத்தளத்தில் வேலை செய்யும் இன்னொருவரிடமிருந்தே குறித்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை, சந்தேகநபர்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணி செலஸ்ரின், ஆவா குழு என்ற பெயர் பொலிஸாராலேயே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தற்போது தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளவும் பாவிக்குமளவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சாதாரண வழக்குகளில் கூட ஆவா என்ற பெயரைப் பொலிஸார் கூறி விடயத்தை பெரிதுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடத்திய நீதிவான் சி.சதீஸ்தரன் உந்துருளி திருத்தகம் நடத்திய இளைஞரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் விடுவித்ததுடன்,ஏனைய மூவரையும் டிசம்பர் மாதம் 2-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அடுத்த தவணையில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.