10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்

ஜேர்மனி நாட்டில் தாயார் ஒருவர் தனது 10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட சென்றதை தொடர்ந்து மூன்று பேர் குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Essen நகரில் 21 வயதான தாயார் ஒருவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 10 மாத ஆண் குழந்தையுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Bochum நகருக்கு சென்றுக்கொண்டுருந்த தாயாரிடம் எண்ணற்ற பொருட்கள் இருந்துள்ளன. மேலும், தனது குழந்தையை ஒரு சிறிய தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு தன்னிடம் இருந்த அனைத்து பொருட்களையும் கீழே இறக்கிவிட்டு குழந்தையை எடுக்க திரும்பியுள்ளார்.

ஆனால், ரயிலின் கதவு திடீரென மூடியுள்ளது. பின்னர், சில வினாடிகளில் ரயில் புறப்பட்டுச்சென்றுள்ளது.

ரயில் பெட்டிக்குள் தனது குழந்தை இருப்பதை கண்டு அலறிய தாயார் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்ற பொலிசார் அடுத்த ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு ரயில் நிலையம் வந்ததும் பொலிசார் விரைந்துச் சென்று குழந்தையை தேடியுள்ளனர்.

ஆனால், பொலிசார் வருவதற்கு முன்னதாகவே குழந்தையை மூன்று வாலிபர்கள் பத்திரமாக வைத்து பாதுகாத்துள்ளனர். இவ்வளவு நேரமும் குழந்தை விழிக்காமல் தூங்கிக்கொண்டு இருந்துள்ளது.

வாலிபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் மூவரும் கினியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் இந்நகரில் ஜேர்மன் மொழி கற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.

குழந்தையை பத்திரமாக தாயாரிடம் ஒப்படைத்த பொலிசார் மூவரையும் வெகுவாக பாராட்டி அனுப்பியுள்ளனர்.