மஹிந்த – ரணிலுக்கு இடையில் ரகசிய ஒப்பந்தம்! அம்பலப்படுத்தும் கொழும்பு ஊடகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

மஹிந்தவின் சீன விஜயத்திற்கான அனைத்துவித ராஜதந்திர வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

மஹிந்த மற்றும் ரணிலுக்கு இடையிலுள்ள இணக்கப்பாடு தற்போது அம்பலமாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தனது சீன விஜயத்தினுள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் தீர்மானிக்கப்பட்டுள்ள 15000 ஏக்கரிலான கைத்தொழில் வலயத்திற்கு இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அந்த இணக்கப்பாட்டிற்கான நன்றியாக சீன விஜயத்தில் இராஜதந்திர தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் கௌரவத்தை வழங்குமாறு பிரதமர் நேரடியாக தலையிட்டு தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த 23ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலத்திற்கு சீன விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

சீனாவின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கமைய மஹிந்த ராஜபக்ச இந்த விஜயத்தில் ஈடுபடுகின்றமையினால் அதற்கான அனைத்து இராஜதந்திர வசதிகளையும் வழங்குமாறு உதித் லொக்கு பண்டார, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது சாதாரண உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்குமாறு அமைச்சர் மங்கள ஆலோசனை வழங்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இது தொடர்பில் தொலைப்பேசியின் ஊடாக ரணிலுக்கு தெரிவித்துள்ளார். அந்த தொலைப்பேசி கலந்துரையாடலில் இவர்கள் இருவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச அண்மையில் ஹம்பாந்தோட்டை மக்களிடம் உள்ள காணியை வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வழங்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்தார் என குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.