அரசின் பகல் கொள்ளை! சிம் கார்ட்களால் மட்டும் இலாபம் இத்தனை கோடிகளா?

2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின்படி,சிம் கார்ட் ஒன்றுக்கு அரசு 200 ரூபா அறவிடுவதன் மூலம் வருடம் ஒன்றுக்கு அரசுக்கு 36 கோடி ரூபா இலாபம் கிடைக்கும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இது அப்பாவி மக்களிடம் இருந்து அரசு மேற்கொள்ளும் பகல் கொள்ளையாகும் எனவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்

“சிம் கார்ட் ஒன்றைப் பெறும்போது அதற்கு 200 ரூபா அறவிடப்படவுள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் சிம் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆகவே, 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின்படி, மாதம் ஒன்றுக்கு அரசுக்கு மூன்று கோடி ரூபா கிடைக்கின்றது. வருடம் ஒன்றுக்கு 36 கோடி ரூபாவை அரசு பெற்றுக்கொள்ளும்.

இந்தப் பணம் அப்பாவி மக்களிடமிருந்துதான் பெறப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது வங்கியில் தங்களது பணத்தை மக்கள் மீளப் பெறும்போதும் பணம் அறவிடப்படுகின்றது.

10 ஆயிரம் ரூபா எடுத்தால் 5 ரூபா அறவிடப்படுகின்றது. தங்களது பணத்தை மீளப் பெறுவதற்கும் பணம் கொடுக்க வேண்டிய மோசமான நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால்,10 ஆயிரத்துக்கு 5 ரூபா என்றுதான் இந்த வரவு – செலவுத் திட்டத்தில்சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றதும் அது அதிகரிக்கப்படும்.

நெத்தலிக் கருவாடு 100 கிராமுக்கு 50 சதமும், சீனி ஒரு கிலோவுக்கு 2 ரூபாவும் குறைத்து மறுபுறம், வேறு வழியாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது.

இந்த அரசால் ஒன்றுமே முடியாது என்பதற்கு ஆதாரமாகத்தான் இந்த வரவு – செலவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு வரவு-செலவு திட்டமே கிடையாது” என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.