முல்லைத்தீவில் மீண்டும் காணி சுவீகரிப்பில் படையினர்!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இவ்வாறு பல முறை இடம்பெற்ற முயற்சிகள் அனைத்தும் மக்களின் போராட்டங்கள் காரணமாக தடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த பிரதேசத்தினை சுவீகரிககும் முயற்சியினை மட்டும் கடற்படையினரும், பாதுகாப்பு அமைச்சும் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். இதன் பிரகாரம்  பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கமைய பிரதேச செயலாளரினால் மீண்டும் சுவீகரித்தல் உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை முகாமைச் சூழ உள்ள பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் சீமெந்து காப்பரண்களாகவும் மாற்றப்படுகின்றன. இவ்வாறு கடற்படையுள்ள பிரதேசத்தினை கடற்படையினரின் பாவனைக்கு வழங்குவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்  குழுவில் விவாதிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் குறித்த 617 ஏக்கர் நிலத்தினையும் எக்காரணம் கொண்டும் கடற்படையினருக்கு வழங்க முடியாது என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முரணாக மீண்டும் சுவீகரிக்கும் முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.