மன்னாரில் பல மில்லியன் செலவில் அமைச்சர் ஒருவர் குளிப்பதற்காக தனிக்குளம்..!!

அமைச்சரொருவர் குளிப்பதற்காக தற்போது பயன்படுத்தும் தாராபுரத்தில் உள்ள குளமொன்றிட்கு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன, என பாராளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தாராபுரத்தில் விவசாய தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குளம் ஒன்று தற்போது அமைச்சர் ஒருவரின் தனியார் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

ஆனாலும் இந்தக் குளத்திற்கு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சிடமிருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த குளத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை அமைச்சர் ஒருவர் வந்து நீராடிவிட்டு செல்வதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த குளம் விவசாயம் உட்பட எந்த தேவைகளுக்கும் மக்களுக்கு பயன்படாத குளம்.

இது இவ்வாறு இருக்க முருங்கன் கட்டுக்கரை குளமானது விவசாயிகளின் விவசாய தேவைக்கு மூலதாரமான குளமாகும். அதற்கான புணரமைப்பு மற்றும் திருத்தப்பணிகள் இதுவரையில் செய்யப்படவில்லை.

2018 ஆண்டிலாவது இந்த குளத்தினை புணரமைப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான பத்திரத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக விவசாய தேவைகளுக்கு பயன்படும் நீரானது வீணாக கடலுக்குச் செல்லாமல் அந்நீரினை பாதுகாத்து பயன்படுத்த கூடியதாயிருக்கும்.

மேலும், ஜனாதிபதி தனது வேலைப்பளுவின் மத்தியிலும் நேற்று எங்களை அழைத்து சில நடவடிக்கைகள் எடுப்பதற்காக ஆலோசனையும் அத்துடன் எங்களது பிரதேசங்களில் காணப்படும் பற்றாக்குறைகள் தொடர்பிலும் ஆலோசித்தார்.

ஆனால் இதுவரையில் அமைச்சர்களில் ஒருவர் கூட இவ்வாறு செயற்பட்டதில்லை என இதன்போது இ. சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.