ஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை எறிந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மலுக்கு அபராதம்

ஜிம்பாப்வேயில் நடந்து வரும் 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் புலவாயோவில் நேற்று முன்தினம் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டியின் 2-வது ஓவரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் சிபாபாவுக்கு பந்து வீசினார். சிபாபா அடித்ததும் பந்து சுரங்கா லக்மல் கைக்கு சென்றதால் அவர் ரன் எடுக்க ஓடாமல் கிரீசில் நின்றார். ஆனால் லக்மல் பந்தை சிபாபாவை நோக்கி எறிந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக பந்து அவர் மேல்படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுரங்கா லக்மலுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது. அத்துடன் அவருக்கு ஒழுங்கீன புள்ளி இரண்டும் விதிக்கப்பட்டது. 2 வருடத்திற்குள் அவர் மேலும் இதேபோல் தவறு இழைத்தால் இடைநீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.