குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!- நளினி சொல்லும் ராஜீவ் கொலைக் களம்

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார்.

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதியுள்ளார். வரும் 24-ம் தேதி சென்னையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

 

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் எண்ணங்களை இந்தப் புத்தகத்தில் நளினி சொல்லி இருக்கிறார். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் பல முதன்முறையாக வெளிவருகின்றன.

அதன் சில பகுதிகள் மட்டும் இங்கே…

இருட்டறையில் இருந்து!

இது கால் நூற்றாண்டைத் தாண்டி இருட்டறைக்கு உள்ளாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் குரல். இப்போது, சிறைக் கொட்டடியைத் தாண்டி உங்களின் இதயத்தைத் தட்டப்போகிறது.

எனக்கான கனவுகளோடு அந்த வசந்தகால நடைபாதையில் எல்லோரையும் போல நானும் இளமையைச் சுமந்து கொண்டு காத்திருந்தேன். திடீரென ஒரு வெடிகுண்டுச் சத்தம், என் கனவுகளை எல்லாம் சிதைத்துவிட்டுப் போகும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இப்போது 26 ஆண்டு காலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கிறேன். இதில் பாதிக் காலம், ‘நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ’, என்ற மிரட்சியில் கழிந்தது. எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் என் கணவரையும், குழந்தையையும் பிரிந்த துயரில் கண்ணீரில், கவலையில் என் மீதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம்!

ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படி போராளிகளுக்கு ஆதரவாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில் பிரபலமாக இருந்த சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு பாக்கியநாதன் போய்வருவான். அங்குதான் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் உள்ளிட்ட பலரும் புகைப்படக்கலை பயிற்சி கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாஸ் என்ற முருகன்.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று தம்பி பாக்கியாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘வேறு வாடகை வீடு பார்த்துக்கொள்ளும் வரை என் வீட்டில் இருந்துகொள்’ என்று தாஸை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் தம்பி. 1991 பிப்ரவரி எட்டாம் தேதி முருகனை முதன்முதலாக சந்தித்தேன். ராயப்பேட்டையில் சபரி காலேஜ், தியாகராய நகரில் விவேகானந்தா காலேஜ் என இரண்டு டுடோரியல் கல்லூரிகளில் சேர்ந்து ஆங்கில வகுப்புக்கு தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் போய்விடுவார்.

வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவரது அப்பா, ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து படகு மூலம் தமிழகத்தின் வேதாரண்யத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில் தான் ஒற்றைக்கண் சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜென்ட்டாக அறிமுகமாகியிருக்கிறார்.

நாங்கள் இருவரும் சம்பந்தமில்லாமல் நிறையப் பேசிக் கொண்டோம். எங்கள் மனதைப் புறக்கணித்து விட்டு இதயங்கள் இரண்டும் தமக்குள்ளே பேசிக்கொள்ளத் தொடங்கி விட்டன. 1991 ஏப்ரல் 21-ம் தேதி திருப்பதி கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றோம். என் கழுத்தில் முருகன் தாலி கட்டினார். அவர் விருப்பப்படி என் காலில் மெட்டியைப் போட்டுவிட்டார். தாலியையும், மெட்டியையும் என் வழக்கில் ஏன் மறைத்தார்கள்? எங்கள் உறவையும் ஏன் கொச்சைப்படுத்தினார்கள் என்பதுதான் எங்கள் காதலுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துரதிஷ்ட வலியாகும்.

தணுவைச் சந்தித்தேன்!

திருமணத்துக்குப் பிறகு, அவரது வெளிநாட்டுப் பயணத்தில் நான் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். பயண முகவர் என்ற அளவில் முதன் முதலில் சிவராசன் என்பவரைப் பற்றி சொன்னார்.

‘ஈழ விடுதலைக்கு இந்தியத் தலைவர்களின் ஆதரவை சிவராசன் திரட்டி வருபவர். ஒவ்வொருவராக சந்தித்து நட்பு ஏற்படுத்தி வருபவர்’ என்று என் கணவர் சொன்னார். 1991 மே மாதம் மூன்றாம் தேதி அன்றுதான் சிவராசன் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார். சுபா, தணு ஆகிய இருவரையும் அழைத்து வந்து அறிமுகம் செய்தார் சிவராசன். வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தங்கி இருந்தார்கள்.

7.5.91 அன்று நந்தனத்தில் நடந்த வி.பி.சிங் கலந்து கொண்ட கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். சென்றேன். கூட்டத்தில் ஹரிபாபு, பேரறிவாளன் ஆகிய இருவரையும் பார்த்தேன். வி.பி.சிங்குக்கு மாலை அணிவிக்க தணு முயற்சி செய்தார். முடியவில்லை. மேடையில் இருந்து இறங்கிப் போகும்போது மாலையைக் கையில் வாங்கிக்கொண்டார் வி.பி.சிங். சுமார் ஏழு மணி நேரம் அங்கு இருந்தோம். பிறகு நடந்த விசாரணையில் அந்தக் கூட்டத்தில் எங்களை பார்த்ததாக ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை.

12.5.91 அன்று சுபாவும், தணுவும் என் வீட்டுக்கு வந்தார்கள். அன்று எனக்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களை மீண்டும் சினிமாவுக்கும் கோயிலுக்கும் கடைக்குமாக அழைத்துப்போய் வந்தேன். மே 18-ம் தேதியும் வந்தார்கள். அன்று முழுவதும் மகாபலிபுரம் சென்று வந்தோம். 19-ம் தேதியும் வெளியில் சுற்றினோம். விடிந்ததும் அவர்கள் கிளம்பினார்கள். நான் வேலைக்குச் சென்றுவிட்டேன்.

அந்த நாளும் வந்தது!

21-ம் தேதி சுபா, தணுவுடன் பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் போய் இறங்கினோம். அங்கு சிவராசனும் ஹரிபாபுவும் காத்திருந்தார்கள். சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கினோம். சாப்பிட்டோம். கூட்டமே இல்லை. போலீஸார் தான் அதிகம் இருந்தார்கள். சிவராசனும், தணுவும் ஏதோ கோபமாகப் பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த முக்கிய நபர்களை சிவராசனுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன். வி.ஐ.பி-கள் உட்காரும் இடத்துக்குள் தணுவை மட்டும் அழைத்துக்கொண்டு போனார். பெண்கள் பகுதியில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் வி.ஐ.பி-கள் வரிசையில் தணுவை முதலாவதாகக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, வேறு ஒரு பகுதியில் தூரமாகப்போய் நின்றுகொண்டு, அங்கிருந்த தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன்.

சுமார் 10.15 இருக்கும் ராஜீவ் காந்தி வந்து விட்டார். அவரை அருகில் சென்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. சுபாவை அழைத்தேன். வேண்டாம் என்று என் கையைப் பிடித்து இழுத்த சுபா, வெளியே இழுத்துச்சென்றார். கூட்டத்தைவிட்டு வெளியே நகர்ந்து சற்று தள்ளி தூரமாகப் போய் நின்றுகொண்டார். ‘என்னாச்சு சுபா… ஏன்?’ என்று கேட்டேன். ‘ஒன்றுமில்லை பேசாமல் இருங்கள்’ என்றாள். என்னையும் வெளியே இழுத்துச் சென்றாள்.

சாலையை நோக்கி நடந்திருப்போம். இது வரையிலும் நான் கேட்டிராத பெரிய வெடிச்சத்தம். திரும்பிப் பார்த்தேன். ஒரே புகைமண்டலம். கூட்டத்துக்குள் இருந்து சிவராசன் எங்களை நோக்கி வந்தார். ஆட்டோவில் ஏறினோம். ‘நிறைய குழப்படிகள்’ என்று சொல்லிக் கொண்டார். புதிதாக ஒரு வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார் சிவராசன்.

கண் முன்னால் நடந்து போனார் தணு!

நாங்கள் மூன்று பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கிறோம். பட்டென்று எங்கள் முன்பாக கண்ணெதிரே தணு நடந்து போய்க்கொண்டிருந்தார். இது கற்பனை அல்ல. நாங்கள் எல்லோருமே அந்தக் காட்சியைக் கண் கூடாகப் பார்த்து நிற்கிறோம். எங்களுக்குமுன் தணு அங்கு எப்படி வந்தாள் என நான் அதிர்ச்சியானேன். எப்படி என சுபாவை சைகையில் கேட்டேன். அவளுக்கும் அதிர்ச்சி. தணுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, வாயில் விரல் வைத்துச் சத்தம் போடாதீர்கள் என காட்டினாள். வீட்டில் இருந்து கிளம்பும்போது எந்த உடையில் கிளம்பினாளோ அதே உடையில், கையில் சந்தன மாலையோடு அப்படியே நடந்துசென்றபடி இருக்கிறாள் தணு.

பிறகு, எங்களை எல்லாம் சி.பி.ஐ. பிடித்து விசாரித்தபோது நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ‘தணுவின் ஆவி’ காட்சியைப் பதிவு செய்திருந்தோம் என்பதைப் பின்நாட்களில் தெரிந்து கொண்டோம். அது பிரமையா அல்லது உண்மையா என்று இன்றுவரை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலர் பார்த்தோம் என்பதை சி.பி.ஐ-யினரும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு அந்தக் காட்சி உதறலாகத்தான் இருக்கிறது. அதை நினைத்துப் பல இரவுகள் நான் பயந்து நடுங்கியிருக்கிறேன்.

எங்களுக்குத் தெரியாது!

அப்போது நான் குழந்தைப் பேறு அடைந்திருந்தேன். என் கணவரை எப்படியாவது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட நினைத்தேன். அதனால்தான் சிவராசன் கோபப்படாதவாறு நடந்தேன். என் கணவர் நன்மைக்காக சுபா, தணுவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்துதான் மனதில் ஒரு சந்தேக நெருடல் இருந்தது. ஏதோ சிக்கலில் எங்களை அறியாமல் சிக்கி விட்டோமோ என நினைத்தேன்.

கணவரை அழைத்துக்கொண்டு திருப்பதி செல்ல திட்டமிட்டேன். மே 10-ம் தேதி அவரை பார்த்தது. மே 25-ம் தேதிதான் பார்த்தேன். வில்லிவாக்கம் வீட்டில் இருந்தபோது சிவராசன் வந்துவிட்டார். எங்களோடு அவரும் திருப்பதி வருவதாகச் சொல்லிவிட்டார். ‘உன் அம்மாவையும் கூப்பிடு’ என்றார் சிவராசன். தம்பிக்கு போன் செய்து சொன்னேன். கொலைத் திட்டம் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் யாராவது சொந்தப் பெயரில் கார் பதிவு செய்து சிவராசன், சுபா உடன் திருப்பதி போயிருப்பார்களா?

சிவராசனும், என் கணவரும் ஒரே அறையிலும்… நான், சுபா, என் அம்மா மூவரும் ஒரு அறையிலும் இருந்தோம். ‘தணு எங்கே?’ என்று என் கணவர் கேட்க, சிவராசன் மழுப்பி இருக்கிறார். 26-ம் தேதி காலையில் தணுவின் புகைப்படம் வெளியாகிவிட்டது. அதன் பிறகுதான் என் கணவருக்கே தெரியும். என்னிடம் இதுபற்றி பேசினார். பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்பதை அவரும் உணர்ந்தார். நம்மால், நமக்கு உதவி செய்த குடும்பத்துக்குச் சிக்கல் வந்ததாக என் கணவர் நினைத்தார். என்னைவிட என் கணவரின் உயிரும் பாதுகாப்பும் எனக்கு முக்கியமாகப்பட்டது.

நாங்கள் காதலிப்பது சிவராசனுக்குத் தெரியும், ஆனால், இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டோம் என்பது தெரியாது. ‘உங்கள் காதல் எனக்குத் தெரியும். நீ சரியாக ஒத்துழைக்கவில்லையானால் உங்களுக்குள் சிக்கல் ஏற்படுத்துவேன்’ என்பது மாதிரி அவர் அணுகுமுறை இருந்ததால், சிவராசன் விஷயத்தில் தள்ளியே இருப்போம் என்ற முடிவில் இருந்தேன்.

வேலையை ராஜினாமா செய்தேன்!

திருப்பதியில் இருந்து திருத்தணி வந்து முருகனை வேண்டிக்கொண்டு சென்னை வந்தோம். மாலை நாளிதழ்களில் மனித வெடிகுண்டு என்று தணு படம் வந்திருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டுவிட்டது. கத்திக் கதறினேன். சுற்றி இருந்த எல்லோருமே அழுதார்கள். போலீஸ் வந்து கேட்டால் உண்மையைச் சொல்லப்போகிறோம். எப்படியும் என் மீது தவறு ஏதும் இல்லை என நிச்சயம் புரிந்து கொண்டு விடுவார்கள் என நினைத்தேன்.

அதன்பிறகுதான், எங்களுக்குள் திருமணம் நடந்து விட்டதை அம்மாவிடம் சொன்னேன். தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அம்மா அழுதார். என் கணவரை சபித்தார். நடந்த தவறில் என் கணவருக்கு ஒரு பங்கும் இல்லையம்மா என்று நான் சொன்னேன்.

என்னுடைய அலுவலகத்துக்கு சி.பி.ஐ. வர ஆரம்பித்தது. சங்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் வைத்திருந்த காகிகத்தில் என் அலுவலக போன் நம்பர் இருந்ததாகவும் சொன்னார்கள். ஜூன் 10-ம் தேதி நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன். அலுவலகம் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அலுவலக ஊழியர் சுஜயா வீடு சென்று அலுவலகச் சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பினேன்.

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பிருந்தால் இப்படியா நடந்து கொண்டிருப்பேன்? தப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்வாரா? மனதளவில் நான் குற்றவாளி இல்லை என்பதால் என்னையும் அறியாமல் அப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

அலையாய் அலைந்தோம்!

நானும் என் கணவரும் சாந்தி (ஜூன் 11) தியேட்டர் அருகே சந்தித்தோம். திருப்பதி போனோம். அதற்குள் என் குடும்பத்தினர் அனைவரும் சி.பி.ஐ-யால் வளைக்கப்பட்டார்கள். ‘என் கணவரையும் குழந்தையையும் காப்பாத்துப்பா’ என்று கடவுளிடம் நான் வேண்டினேன். கணவரை முடி காணிக்கை செய்ய வைத்தேன். ‘ராஜீவ் கொலையை வெற்றிகரமாக முடித்து விட்டதற்கு நேர்த்திக்கடன் செய்தோம்’ என்று சி.பி.ஐ தனது வழக்கில் ஜோடித்தது.

மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குமா பெருமாள் ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டிருப்பார்? ஏழுமலையானுக்கு இதெல்லாமும் ஒரு வேலைதான் என்று சி.பி.ஐ-யினர் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? மதுரை, பெங்களூர், விழுப்புரம் என அலைந்தோம். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தோம். சைதாப்பேட்டையில் இறங்கியபோது போலீஸ் கைதுசெய்தது.

சித்ரவதைகள்!

அடி, சித்ரவதை, பாலியல் கிண்டல்கள், நிர்வாணம் என ‘மல்லிகை’ விசாரணையில் அனைத்தையும் கொடுத்தார்கள். முக்கிய அதிகாரியான ரகோத்தமன், என் தாலியைப் பிடித்து இழுத்து, ‘இது எதுக்கடி’ என்று அறுத்தெடுத்தார். வளையல்களை உடைத்து நொறுக்கினார். காலில் அணிந்திருந்த மெட்டி, கொலுசையெல்லாம் பலவந்தமாகப் பிடுங்கினார். என்னை அலங்கோலப்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார். தூங்கவிடவில்லை. அடி வயிற்றுக்கு கீழே எத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சித்ரவதைகள்.

சுபா, தணுவுடன் நான் பழகி இருக்கிறேன். என் கணவர், சிவராசனுடன் பழகி இருக்கிறார். இதனால் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் மேல் திணித்து எங்களை முதன்மை குற்றவாளியாக்க நினைத்தார்கள். சி.பி.ஐ. சொல்வதை எல்லாம் என்னை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். என்னை அப்ரூவராக்கி, என் கணவரை நானே காட்டிக்கொடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் நினைத்தார். எங்களுக்குள் திருமணமே நடக்கவில்லை என்று போலி ஆவணத்தை உருவாக்கினார்கள். எங்கள் காதலையும், கற்பையும் கொச்சைப்படுத்தினார்கள். எங்கள் இருவரையும் பிரிக்க நினைத்தார்கள். நாங்கள் உறுதியாக இருந்தோம்.

சி.பி.ஐ சொல்வதைப் போல பொய் வாக்குமூலம் கொடுத்தால் என் கணவருக்கு தூக்குத் தண்டனை உறுதியாகும். முடியாது என்றால் இங்கேயே அவரை அடித்துக் கொன்று போடுவார்கள். இரண்டுமே எனக்கு எதிரானதுதான். எதைச் செய்வது? எதை விடுவது?

அப்ரூவராகி நானே அவருக்குத் தூக்குக் கயிறை எடுத்துக் கொடுப்பதைவிட கடைசி வரை நான் அவருக்கு உண்மையாகவே நின்று போலி என்கவுன்டர் மரணத்தைத் தருவது எவ்வளவோ மேல்!

(நளினியின் கருவை கலைக்கச் சொன்ன போலீஸ் அதிகாரி, பிரியங்கா கேட்ட கேள்விகள் போன்ற அதிர்ச்சியான விஷயங்கள் அடுத்த இதழில்…)