ஆதிசங்கரரும் திருப்பதியும்

ஆதி சங்கரரை ஒரு காபாலிகனிடம் இருந்து காப்பாற்றினார் நரசிம்மர். அவர் உடனே சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) சென்று நரசிம்மனை வழிபட்டார்!

அப்போது “திருமலை செல்! மோட்சத்துக்கு என்ன வழி? என்பதைச் சூசகமாக காட்டி நிற்கிறான்! அங்கு சென்றால் தான் உமக்கு விளங்கும்!” என்று உத்தரவானது! உடனே திருப்பதி யாத்திரையை மேற்கொண்டார் ஆதிசங்கரர்.

அவர் திருமலை வந்து எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு களித்தார். வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை! பிஞ்சிற் பழுத்த துறவியான அவரே பெருமாளின் பேரழகில் மனம் தடுமாறினார்! உடனே விஷ்ணு பாதாதி கேச ஸ்தோத்திரம் என்ற துதியை இறைவன் மேல் பாடத் தொடங்கி விட்டார்.

எவ்வங்கமும் விடாமலிருக்கு மாறு சங்கரர் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பவரும், கருடனை வாகனமாக உடையவருமான வைகுண்ட நாதனே திருப்பதியில் குடி கொண்டிருப்பதால், இப்பூலோக வைகுண்ட நாதனின் ஒவ்வொரு அங்கத்தின் அழகையும் பாதத்திலிருந்து கேசம் வரை வர்ணிக்கிறார். இதுவே “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்” என்று கூறப்படுகிறது.

இத்துதியில் முதல் பத்து சுலோகங்களில் விஷ்ணு பகவான் யுத்தத்தில் பயன்படுத்தும் பஞ்ச ஆயுதங்களை துதிக்கிறார்.

1. ஓம் என்ற நாதத்தை உணர்த்துகிறது. ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கு.

2. எஞ்ஞான்றும் சுழன்று கொண்டே இருக்கும் கால சக்கரத்தை காட்டுகிற ‘சுதர்சனம்’ என்ற சக்கரம்.

3. பெருமானின் ‘சார்ங்கம்’ என்ற வில்.

4. மது என்ற அரக்கனைக்கொன்று தேவர்களுக்கு ஆனந்தம் அளித்தது ‘நந்தகம்’ என்றவாள்.

5. தாமரை போன்ற கால்களில் தஞ்சம் கொண்டிருக்கும் ‘கௌமோதகி’ என்ற அவருடைய கதை. தங்க நிறம் உள்ள வாகனமான கருடனையும், படுக்கையாக அமைந்திருக்கும் அனந்தனையும், ஸ்ரீதேவி இவர்கள் யாவரையும் வணங்குகிறார்.

பரந்தாமன் பாத தூளிகளைக்கண்டு அவற்றைத் தம் சிரசில் தரிக்க தேவர்கள் துடிக்கின்றனர். இப்பாதத்தூளிகள் நம் பாவக்குவியல்களை அழிக்கும் வல்லமையுடையன என்கிறார்.

பின்னர் ஸ்ரீனிவாசனின் பாதங்களில் மீன், சக்ரம் போன்ற ரேகைகளின் சோபையையும் புகழ்ந்து, ஒரு அடியால் விண்ணையும் மற்றதால் மண்ணையும் மூன்றாவது அடியால் பலிச் சக்ரவர்த்தியை பாதாளத்திற்கும் இந்திரனை சுவர்க்கத்திற்கும் அனுப்பிய அப்பாதங்களை வணங்குகிறார். விஷ்ணுவின் பாதம் பிரம்மலோகத்தை அடைந்த போது பிரம்மன் தன் கமண்டல நீரால் அத்திருப்பாதங்களை நீராட்டிய அந்த அபிஷேக நீரே புனிதகங்கையாக மாறிமண்ணுலகிற்கு ஓடி வரப்பிரசாதமாக அமைந்ததை நினைவுபடுத்துகிறார்.

உலகெங்கும் வியாபித்துள்ள விஷ்ணுவிற்கு ஆயிரம் பாதங்கள் உண்டு. அத்திருப்பாதங்கள் என்னைக் காக்கட்டும் என சங்கரர் துதிக்கிறார். பரதனால் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட பாதுகையின் மகிமையை ஐந்து சுலோகங்களில் புகழ்கிறார். பின்னர் கால் விரல்களையும் பளிங்கு போன்ற நகங்களையும் புகழ்கிறார்.

இந்திராதி தேவர்கள் விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து வணங்கும் போது,நிர்மூலமான பளிங்கு போன்ற நகரங்களில் தங்கள் உருவங்கள் பிரதிபலிக்க, தமக்கும் மேற்பட்ட தேவர்கள் இங்குள்ளனரே என திகைக்கின்றனர் என்றும், அவ்வாறே நவரத்னங்கள் பதிந்த மகுடத்தோடு இவர்கள் அவர் பாதங்களில் நமஸ்கரிக்கும் போது விஷ்ணுவின் பாதங்களோ நவரத்தினம் நிறைந்ததாக உள்ளன என மோகம் அடைந்தனர். என்றும் சங்கரர் சித்தரித்துக் கூறுகிறார்.

பின்னர் எம் பெருமான் வயிற்றைச்சுற்றி கட்டப்பட்ட பட்டுத்துணியையும் ஒட்டியாணத்தின் அழகையும், அவர் தொப்புளின் எழிலையும், அண்டங்கள் அடங்கிய மணிவயிற்றையும், ஸ்ரீவத்ஸம் என்ற அழகிய மச்சத்தையும், மார்பை உறைவிடமாகக்கொண்ட மகாலட்சுமியையும், அவள் அணிந்துள்ள மாலைகளையும், வைஜயந்தியையும் போற்றி வணங்கினார்.

பாதம் முதலாக, உச்சி வரை, ஒவ்வொரு அங்கமாக வர்ணித்து வர்ணித்து, விஷ்ணும் நமாம்யஹம் என்று போற்றி மகிழ்ந்தார். இப்படி மோட்ச ரகசியம் காட்டிக் கொடுப்பவனை, ஊருக்கே காட்டிக் கொடுக்க ஆதி சங்கரர் முடிவு செய்தார். மக்கள் மலையேறி வந்து அல்லவா சேவிக்க வேண்டும்!

ஏறுவதற்கே மூனு மணி நேரம் மேலே ஆகுது! குளிர் வேற அப்பப்போ நடுங்குது! மிகவும் கடுமையான யாத்திரையாக இருக்கே! மக்கள் வராது போனால்? பெரும் புதையலை அல்லவா இழப்பார்கள்?

ஜனாகர்ஷ்ணம் (ஜன+ஆகர்ஷணம்=மக்கள் ஈர்ப்பு),
தனாகர்ஷணம்(தன+ஆகர்ஷணம்=செல்வ ஈர்ப்பு)

என்ற இரண்டு மந்திர யந்திரங்களை ஆதிசங்கரர் செய்வித்தார். தாமே யோகத்தில் இருந்து பெருமாளின் திருவடிகளில் அந்த சக்கரங்களை ஸ்தாபிக்கச் செய்து விட்டார். ஏற்கனவே ஏழுமலையானின் பத்மபீடத்தின் அடியில், மனோ காரகனான சந்திரன் வேறு நிலை கொண்டுள்ளான்!

இன்னிக்கும் ஜோதிட பரிகாரங்களில், சந்திர தோஷ நிவர்த்தித் தலமாகத் திருப்பதி சொல்லப்படுகிறது! இப்போது இந்த ஜனாகர்ஷண யந்திரம் வேறு! சொல்லணுமா?

இது தான் திருமலைச் செல்வச் செழிப்புக்குக் காரணம் என்று பலரும் சொல்வார்கள்!

சங்கரருக்குப் பின் வந்த அனந்தாழ்வான்-இராமானுசர் காலத்தில் கூட அவ்வளவு செழிப்பு இல்லை! பூமாலைக்கே வழியின்றி இருந்தான் திருமலையான்!

சங்கரர் ஸ்தாபித்த யந்திரபலம் பிரசித்தமாகத் தெரிய தொடங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாய், திருமலையே மக்கள் மலையாக மாறி விட்டது!