நல்லதையே தேடுவோம் – ஆன்மிக கதை

தேவலோகத்தில் இந்திரன் தலைமையில் தேவர்களின் சபை கூடியிருந்தது. அதில் தேவர்களின் நலன் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பேச்சு பூலோகத்தில் வாழும் மனிதர்களைப் பற்றி திரும்பியது. உடனே இந்திரன், ‘பூலோகத்தில் கிருஷ்ணதேவன் என்னும் அரசன் இருக்கிறான். அவன் மிகவும் நல்லவனாகவும், குணம் படைத்தவனாகவும் உள்ளான். அவனைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவன் யாரும் இருக்க முடியாது. எல்லோரையும் விட அவனேச் சிறந்தவன்’ என்றான்.

தேவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட தேவன் ஒருவன், சாதாரண மனிதன் ஒருவனைப் பற்றி புகழ்ந்து பேசியது, அங்கிருந்த தேவர் களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. அவன், ‘கேவலம் ஒரு சாதாரண மனிதனைப் பற்றி, உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, அதுவும் தேவர்களின் தலைவன் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு அந்த மானிடனிடம் இருக்கிறது? உங்கள் அனைவருக்கும் அவனிடம் உள்ள குறையை எடுத்துக்காட்டுகிறேன். அதற்காக இப்போதே நான் பூலோகம் செல்கிறேன்’ என்று கூறியவன் பூலோகம் புறப்பட்டுச் சென்றான்.

அரசனான கிருஷ்ணதேவன் வரும் வழியில், பூலோகம் வந்த தேவன், ஓர் இறந்த நாயின் வடிவத்தில் விழுந்து கிடந்தான். அந்த நாயின் உடலில் இருந்து சகிக்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. நாயின் வாய்ப்பகுதியும் கிழிந்து அவலட்சணமாக காணப்பட்டது. கிருஷ்ணதேவன், நாயின் இறந்து கிடந்த பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது வழியில் கிடந்த அந்த நாயைக் கண்டான்.

அவனது பார்வையும், கண்ணோட்டமும் வேறு விதமாக இருந்தது. அவன் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ, அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றியோ சிந்திக்கவே இல்லை. ஆனால் அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

ஆம், அவன் அந்த நாயைப் பார்த்த நொடியில், ‘ஆகா! இந்த நாயின் பல் வரிசை எவ்வளவு அழகாக இருக்கிறது! முத்துக்களைப் போல் அல்லவா அவை பிரகாசிக்கின்றன!’ என்று வாய்விட்டு கூறினான்.

கெட்ட விஷயங்களில் மனதை செலுத்தாமல், அதில் ஏதாவது நல்லது இருக்கிறதா? என்ற அவனது தனிப்பட்ட பார்வைதான், மன்னனின் தனிச் சிறப்பு என்பதை, நாய் உருவில் விழுந்து கிடந்த தேவன் உணர்ந்து கொண்டான்.

உடனடியாக சுய உரு பெற்று, அரசனின் முன்பாக நின்றான். ‘மன்னா! உண்மையிலேயே உங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும், நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் இருக்கிறது. இந்த உலகத்தில் தங்களைப் போன்ற குணவான்களே சுகமாக வாழ்வார்கள்’ என்று கூறி அவரை ஆசீர்வதித்து விட்டுச் சென்றான்.