தென்கொரியாவில் பெண் அதிபர் ராஜினாமா கோரி 5 லட்சம் பேர் போராட்டம்

தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஜியூன்-ஹை. இவரது நண்பரும், ஆலோசகருமான கோல் ஒன்-சில் பல்வேறு முறைகேடுகள் மூலம் ஊழலில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது.

அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி இவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அதிபர் பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக இதுவரை 3 பேரணிகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. அவை அமைதியாக நடந்தன.

இந்த நிலையில் தலைநகர் சியோலில் நேற்று மீண்டும் மிக பிரமாண்டமான பேரணியும், அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. பேரணியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தற்போது தேர்வு நெருங்கி வரும் நிலையிலும் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். அதிபர் பார்க் பதவி விலக வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர்.

பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.