300 பொலிஸாரை கொன்று புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் 300 ஈராக் பொலிஸாரை கொன்று ஒரே குழியில் புதைத்துள்ளதாக ஈராக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் மொசூல் மாநகரின் தென் பகுதி நகரான ஹம்மான் அல் அலில் என்ற நகரில் நடந்துள்ளது.

ஈராக் பொலிஸார் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கழுத்தை அறுத்தோ அல்லது சுட்டோ கொலை செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நகரில் இருந்து பின்வாங்கி செல்லும் முன்னர் சுமார் 200 பேரை கொலை செய்துள்ளனர்.

கிராமங்கள் மற்றும் நகரில் இருந்த 2 ஆயிரம் பேரில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை தனியாக பிரித்து, அவர்களை தம்முடன் வருமாறு கட்டளையிட்டுள்ளனர்.

பின்னர் இந்த பொலிஸ் அதிகாரிகளில் 100 முதல் 125 பேரை பெரிய ட்ரக் வாகனம் ஒன்றில் ஏற்றி விவசாய கல்லூரிக்கு அருகில் உள்ள பெரிய குழி ஒன்றுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வெடி சத்தங்களும், நபர்கள் கத்தும் சத்தங்களும் கேட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 29ம் திகதி இரவு 130 முதல் 145 வரையான பொலிஸாரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.