ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ டாக்டர் பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றும், வழக்கமான உணவை சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனி மையமாக ‘அப்பல்லோ ஸ்ரோக் நிறுவனங்கள்’ தொடக்க விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

தொடக்க விழா முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை எப்படி இருக்கிறது?

பதில்:- நான் நம்பிக்கையோடு சொல்ல முடியும். எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளாலும் மேற்கொள்ளப்பட்ட எல்லோருடைய பிரார்த்தனைகளாலும், இரவு பகலாக டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா கடும் நோய் தாக்குதலில் இருந்து மீண்டு இப்போது மிக நன்றாக இருக்கிறார்.

முழுமையாக குணம் அடைந்து விட்டார். இப்போது என்ன தேவை என்றால் 6 அல்லது 7 வார சிசிச்சைக்கு பிறகு அவருடைய மற்ற உடல் உறுப்புகளை வேகப்படுத்தவேண்டும். அதற்காகத்தான் இப்போது சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சிகிச்சை முடிந்து ஜெயலலிதா எப்போது வீடு திரும்புகிறார்?

பதில்:- அவர் எந்த நேரம் போக விரும்பினாலும் மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு செல்லலாம். அவரது சிந்தனை செயல் திறன் மிக நன்றாக இருக்கிறது.டிராக்கியாஸ்டமியை பொறுத்தவரை குழாய் இருக்கிறது ஆனால் அதை பயன்படுத்தவில்லை.

நுரையீரல் விரிவடைவதற்காகத்தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவருக்கு 15 அல்லது 20 நிமிடம் மட்டுமே வெண்டிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது.மற்றபடி வெண்டிலேட்டர் உதவி இன்றி மிக அருமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நுரையீரல் பாதுகாப்புக்காகத்தான் அது பயன்படுத்தப்படுகிறது.அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் நன்றாக தூங்குகிறார். அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார். அவருக்கு புரதசத்து உள்ள உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜெயலலிதா எப்போது அலுவல்களை கவனிப்பார்?

பதில்: அவருடைய பணி என்பது, வழி காட்டுதலும், உத்தரவிடுவதும்தான். அதை அவர் இப்போதே செய்யமுடியும்.அவர் நன்றாக இருக்கிறார். அதை திரும்ப திரும்ப உறுதியாக சொல்ல முடியும். நான் அடிக்கடி அவரை பார்ப்பதில்லை.

பணிகளை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது. பணி செய்யவேண்டும் என்று அவருக்கு பேராசை உண்டு.

வேலை பார்க்கவேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் பணியை அவர் தொடங்குவார். அவர் பணிக்கு செல்வதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதற்கு ஒரே காரணம் தான் உண்டு. அதாவது தொற்றுகிருமி பாதிப்பு வராமல் தடுப்பதற்காகவும், அவர் தன்னை மேலும் திடமாக்கி கொள்ளவும்தான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

நமக்கு காய்ச்சல் 10 நாட்கள் என்றாலே 10 நாட்களுக்கு ஆண்டி பயாடிக் உட்கொள்ளுவோம். அந்த நிலையில் நமக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும்.

எனவே அந்த விளைவாகத்தான் தொற்று கிருமி ஏற்படக்கூடாது என்பததற்காகத் தான் அனைத்து கட்டுப்பாடுகளையும் கொண்ட அவசர சிகிச்சை பிரிவில் அவர் இருக்கிறார்.

எனவே தொற்றுக் கிருமியால் பாதிக்கப்படாமல் இருக்கத்தான் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

கேள்வி: எப்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்?

பதில்; ஜெயலலிதா தீவிர சிசிச்சை பிரிவை விட்டு சாதாரண வார்டுக்கு விரைவில் மாற்றப்படுவார்.இவ்வாறு அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.