சம்பந்தன் ஐயாவின் காத்திரமான முன்னெடுப்புகள்!

எதிர்பார்ப்புகளுடன் பொறுமை காத்திருந்த தமிழ் மக்கள் களைப்படைந்து விட்டதாகவும் இந்த எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்காக அரசுடன் இணக்கப்பாட்டு அடிப்படையில் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் அவர் தமது நேர்மையான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாகவே கருத முடிகிறது.

வெறுமனே ஒரு அரசியல்வாதி என்பதற்கப்பால் யதார்த்த பூர்வமான ஜனநாயக அரசியல்வாதி என்பதையே அவரது கருத்து புலப்படுத்தி நிற்கின்றது.

எதிரணியில் இருந்து கொண்டு பேசிப் பேசியே காலம் கடத்துவதை விட இணக்கப்பாட்டு அரசியல் மூலம் தமது மக்களின் எதிர்பார்ப்புகளை பெற்றுக் கொள்ள முனைவதனூடான தூய்மையான நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகவே சம்பந்தன் ஐயாவின் அறிவிப்பை நோக்க முடிகிறது.

வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான ஐந்தாவது நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே சம்பந்தன் ஐயா தமது உள்ளார்ந்த மனநிலையில் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அதுவும் தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நீண்ட காலமாக பொறுமை காத்து வந்தனர். அந்த பொறுமை காத்ததில் இன்று அந்த மக்கள் களைப்படைந்து போயுள்ளனர்.

இனிமேலும் பொறுமை காக்க முடியாது. அதற்காக போராட்டங்கள் மூலம் மேலும் காலம் கடத்துவது அர்த்தமற்றது என்பதை நன்கு உணர்ந்த நிலையிலேயே மாற்று சிந்தனை என்ற அடிப்படையில் அரசியல் பயணத்தை தொடர்வது தொடர்பான நிலைப்பாடாகவே இதனை காண முடிகிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பு மிக்க பதவியில் அமர்ந்திருக்கும் சம்பந்தன் ஐயா ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராவார். அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதை விட மிக ஆறுதலாக ஆராய்ந்து முடிவெடுப்பதில் ஒரு சாமர்த்தராகவே அரசியல் தளத்தில் பார்க்கப்படுகிறார்.

எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்வதை விட தமது மக்களின் எதிர்பார்ப்புகளை முடிந்தளவுக்கு அடைந்து கொள்ளும் பொருட்டு இணக்க அரசியல் ஒன்றின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் சாதகமான அடைவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக இதனை அவதானிக்க முடிகின்றது.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் சகல தரப்பினருடன் இணைந்து புதியதொரு அரசியல் அமைப்பை தயாரிக்க முற்பட்டிருப்பதை வரவேற்று பாராட்டி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கு தோதான வகையிலேயே அரசியல் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டன.

அதன் பின்விளைவுகளை கடந்த 60 வருடங்களாக அனுபவித்து வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர் இதில் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு காட்டத் தவறவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் முதற் தடவையாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளும் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளமை ஆரோக்கியமானதாக காண முடிவதை அவர் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத் திட்டங்களை அரசு தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

அரசு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை, தமிழினத்தை மதிக்கவில்லை, உதாசீனப் படுத்துகின்றது என்றவாறு விமர்சனப் போக்கிலும், எதிர்ப்பு அரசியல் நிலையிலும் பேசிக் கொண்டிராமல் ஆரோக்கியமான வகையில் ஆளுமை மிக்க யோசனைகளையும், ஆலோசனைகளையும் அவர் முன்வைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகள் அரசியல் இருப்பு என்பன தொடர்பாகவும் மீள் குடியேற்றம் குறித்தும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறானதொரு அர்த்த பூர்வமான வேலைத் திட்டம் உருவாக்கப்படுமானால் அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அவர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.

முதற்கட்டமாக அரசாங்கம் அதற்கான திட்ட வரைவை தயாரிக்க வேண்டுமென்ற யோசனையையும் முன்வைத்திருக்கின்றார்.

மக்களின் பிரதிநிதிகளாக எம்மைத் தெரிவு செய்து இங்கு அனுப்பி இருப்பது கதிரைகளை சூடாக்குவதற்கும் எமது சொகுசு வாழ்வுக்காகவும் அல்ல. அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

ஆனால் நாங்கள் சதா காலமும் எதிர்ப்பு அரசியல் நடத்திக் கொண்டு இருக்க முடியாது என்பதை சூசகமாக எடுத்துக் கூறி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் யதார்த்த பூர்வமாக அணுகுமுறைகள கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

பேசிப் பேசி காலம் கடத்துவதை விட காரியசித்தியுடன் நமது பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது மக்களது மனங்களை திருப்திபடுத்துவதற்காக பேசுவதை விட அவர்களது எதிர்பார்ப்புகளை அடைவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருப்பது அவரது அறிவுக் கூர்மையின் பிரதிபலிப்பாகும்.

சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்கக் கூடிய அரியதொரு சந்தர்ப்பம் இன்று உருவாகியுள்ளது.

எதிரணியில் இருந்து கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்வதை விட அங்கிருந்த வண்ணமே இணக்க அரசியல் பக்கம் நகரும் புதிய பயணத்துக்கான இந்த காத்திரமான சமிக்ஞையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அழைப்பை பத்தோடு பதினொன்றாக பார்க்காமல் உரிய கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியமான அடித்தளத்தை இட முடியும் என நம்புகின்றோம்.

வடக்குக்காக என்பதை விட நாடு வெற்றி கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்களாக மாற வேண்டும்.

தோல்வி என்ற வார்த்தை அகராதியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. பயன்படுத்திக் கொள்வோமா?