இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு தற்காலிக பூட்டு – 3000 நோயாளர்கள் பாதிப்பு!

காலி கராபிட்டிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால் 3000 இற்கும் மேற்பட்ட இருதய நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வைத்தியசாலையின் இருதய நோயாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் நோய் கிருமி ஒன்று பரவி வருவதன் காரணமாக கடந்த 9 ஆம் திகதி குறித்த இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது என அமைப்பின் செயலாளர் தம்மிக்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது,

முன்னதாக,ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் குறித்த சத்திரசிகிச்சைப் பிரிவு மூடப்பட்டிருந்தமையால் இருதய சத்திர சிகிச்சை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

மேலும், சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நோயாளர்களின் பட்டியல் 2020 ஆம் ஆண்டு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இருதய சத்திர சிகிச்சை நோயாளர்கள் தங்கியிருக்கும் அறைகளில் நீர் விநியோகம் இருப்பதில்லை என்றும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் செயலாளர் தம்மிக்க ஜயவர்தன கூறியுள்ளார்.