கந்தனருள் கிடைக்கும் கார்த்திகை விரதம்

கார்த்திகை மாதத்தில் கந்தவேலன் மீது நம்பிக்கை வைத்தால் பார்த்த இடங்களில் எல்லாம் பாராட்டும், புகழும் கூடும். நேர்த்தியோடு வாழலாம். நிம்மதியோடு இருக்க முடியும். சூழ்ச்சிகளிலிருந்து விடுபட சுப்ரமணியரை வழிபட வேண்டிய மாதமிது. அதனால்தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்றார்கள். அந்த முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைக்கு ஒரு மிகப்பெரிய பெருமை உண்டு. நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் ‘கை’ என்ற எழுத்தில் முடியும் மாதமிது. வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதமாகும்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையைத்தான் ‘திருக்கார்த்திகை’ என்றும், ‘பெரிய கார்த்திகை’ என்றும் அடைமொழி சூட்டி அழைக்கின்றோம். ஊர்களுக்கு ‘திரு’ என்று அடைமொழி சேர்த்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திருமயம், திருப்பத்தூர், திருவாடானை, திருவாவடுதுறை, திருவாரூர், திருப்புங்கூர் போன்ற எண்ணற்ற ஸ்தலங்கள் ‘திரு’ என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.

சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்திருப்பது போல நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று சேர்த்துக் கொண்டாடுவது கார்த்திகை மாதம் மட்டும்தான். ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் இது.

இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு ‘கார்த்திகேயன்’ என்றும், ‘கார்த்தி’ என்றும், ‘கார்த்திக்’ என்றும் பெயர் வைப்பது வழக்கம். ‘கந்தன்’ பெயரைச் சூட்டினால் எந்தநாளும் இனிய நாளாக அமையும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கார்த்திகை அன்று பெரியசாமி, வேலுச்சாமி, கந்தசாமி என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஆறுமுக சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை வழங்குவார்.

அந்த இனிய நாள் திருக்கார்த்திகை, கார்த்திகை மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமை (12.12.2016) அன்று வருகின்றது. பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் மேற்கொள்ளுங்கள். பாவங்கள் அதிகரிக்கும் யுகம் தான் கலியுகம். மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

அங்ஙனம் செய்த பாவங்களுக்கும், பரிகாரம் செய்யத் தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்கின்றார்கள். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரமன்று (11.12.2016 ஞாயிற்றுக்கிழமையன்று) மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி வைத்தால் உள்ளம் மகிழும் வாழ்க்கை அமையும்.

திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் மெழுகி, கழுவிச் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும். காலையில் விரதமிருப்பது நல்லது. இரவு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

கார்த்திகையன்று விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தைச்செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும் இந்த விரதம் பலன் தருகின்றது.

இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இரவு வரை விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் விரதமிருப்பதும் உகந்ததாகும். அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.

மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது. கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது நல்லது. அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கந்தன் சன்னிதியில் கைகூப்பித் தொழுவது நல்லது.

ஜோதியை வலியுறுத்தும் விதத்தில் ஜோதி வடிவான இறைவனை வழிபட சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்கின்றோம். திரிசங்கு மன்னன் முதல் எண்ணற்ற மன்னர்கள் இழந்த நாட்டைக் கூடத் திரும்பப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

எனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.

‘கந்தன் பேரைக் கார்த்திகையில் சொல்லிப் பாருங்க-நம்

கவலையெல்லாம் தீருமிது உண்மைதானுங்க!

செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!

தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

என்று கவிஞர்பெருமக்கள் கந்தன் புகழைப் பாடிவைத்துள்ளனர்.

நாமும் கந்தனை வணங்கி அருள் பெறுவோம்.