மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்: ஜெயலலிதா நெகிழ்ச்சி

மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அவர் பெயரில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மக்களின் பேரன்பு இருக்கும்போது எனக்கு எந்த குறையும் இல்லை; இறைவனின் திருவருளாள் விரைவில் நலம் பெறுவேன். மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்.

வெகுவிரைவில் முழுமையாக நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன். உலகம் வியக்கும் உன்னத திட்டங்கள் பல தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அன்பையும் பேராதரவையும் வாக்காள பெருமக்கள் தர வேண்டும்.

ஓய்வு என்பது நான் அறியாதது; உழைப்பு என்னை விட்டு நீங்காதது. எனக்காக அதிமுகவினர் உயிரை மாய்த்தது வேதனை தருகிறது.

என்னுடைய எண்ணம், இதயம் எப்போதும் உங்களுக்காகவே இருக்கும் என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

தம்முடைய உடல்நலம் குறித்து ஜெயலலிதா வெளியிட்ட முதல் அறிக்கை இது. அத்துடன் இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.