ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார் ஓட்டக் கூடாது: ஏன் தெரியுமா?

சர்வதேச நாடுகளில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் இருந்தாலும் கூட அவர் குறிப்பிட்ட சில முக்கிய வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி என்றால் உலகில் உள்ள அனைத்து வசதிகளையும் அவர் எளிதில் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது.

ஆனால், ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் பதவி ஏற்கும் ஒருவர் அந்த நாள் முதல் பொதுச்சாலைகளில் கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டார்.

இந்த விதிமுறையானது பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு மட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் என்பது முக்கியமானதாகும்.

இதுமட்டுமில்லாமல், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் மனைவிகளும் வாகனங்களை இயக்க அந்நாட்டு உளவுத்துறை பொலிசார் அனுமதிக்க மாட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணம், ஜனாதிபதியின் உயிரை பாதுகாப்பதே ஆகும். உதாரணத்திற்கு, தற்போது 8 ஆண்டுகள் ஜனாதிபதி பதவி வகித்த ஒபாமா ஒருமுறை கூட வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படவில்லை.

ஒருவேளை ஜனாதிபதி விரும்பினால், அவர் ஓய்வு நேரங்களில் தங்கும் டேவிட் முகாமிற்கு உட்புறமாக இருக்கும் சாலையில் வாகனங்களை இயக்கலாம்.

வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி பிற முக்கிய வசதிகளும் ஜனாதிபதிக்கு வழங்க உளவுத்துறை பொலிசார் அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு, ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் எங்கும் வெளியே செல்ல முடியாது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றாலும் கூட பொலிசாரின் அனுமதி அவருக்கு தேவை.

இரண்டாவதாக, உலகில் ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரமான கைப்பேசிகள் வந்தாலும் கூட அவற்றை ஜனாதிபதி பயன்படுத்தக் கூடாது.

ஜனாதிபதிக்காக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசியை மட்டுமே அவர் பயன்படுத்த வேண்டும். தற்போது ஒபாமா பிளாக்பெரி கைப்பேசியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, கணிணிகளை உபயோகிக்கவும் ஜனாதிபதிக்கு சில விதிமுறைகள் உள்ளன. வெள்ளை மாளிகையில் உள்ள எந்த கணிணியையும் ஜனாதிபதி பயன்படுத்த முடியாது.

சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொலிசாரால் அனுமதிக்கப்பட்ட கணிணியை மட்டுமே ஜனாதிபதி பயன்படுத்த முடியும்.

நான்காவதாக, உலக நாடுகளின் தலைவர்கள் அளிக்கும் அன்பளிப்புகள், பரிசுகளை ஜனாதிபதி பெறக்கூடாது. ஒருவேளை காங்கிரஸ் இதற்கு அனுமதித்தால் ஜனாதிபதி அவற்றை பெறலாம்.

மேலும், பதவியில் இருக்கும்போது அரசு ஊதியத்திற்கு அதிகமாக ஒரு ரூபாயை கூட ஜனாதிபதி வருமானமாக பெறக்கூடாது என்பதும் சட்டத்தில் இருக்கும் முக்கியமான விதிமுறையாகும்.