‘முதல்–அமைச்சர், தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டார்

முதல்–அமைச்சர், தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்’ என்றும், ‘வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார்’, என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.

தொடர் சிகிச்சை

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் 22–ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் தமிழக முதல்–அமைச்சர் வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார் என்றும், தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் தெரிவித்து உள்ளார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:–

குணமடைந்து விட்டார்

நான் ஏற்கனவே கூறியபடி, முதல்–அமைச்சர் தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார். இப்போது உள்ள தேவை என்றால், வீடு திரும்புவதற்கு, அவர் தன்னை தெம்பாக்கிக்கொள்ள வேண்டும். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

அறை மாற்றம் என்பது கூட முதல்–அமைச்சரின் வசதிக்காகத்தான். சிகிச்சையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. சிகிச்சையை பொருத்தமட்டில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘தெரபி’ சிகிச்சைகள் முழுமையடைந்து உள்ளது. அவர் குணமடைந்து விட்டார். இப்போது தேவை அவர் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும். அதற்காகத்தான் டாக்டர்கள் குழு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமான உணவுகளையே…

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவதை அவர் தான் முடிவு செய்வார். அவர் எப்போது, ‘தான் பூரண குணமடைந்து உடல் தகுதி பெற்றுவிட்டோம். ஆஸ்பத்திரி சிகிச்சை போதும்’, என்று நினைக்கிறாரோ அப்போது அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு விடலாம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் ‘டிஸ்சார்ஜ்’ ஆவது குறித்து எந்த தேதியும் முடிவு செய்யப்படவில்லை. வழக்கமான உணவுகளையே அவர் சாப்பிட்டு வருகிறார்.  இவ்வாறு டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.