யாருக்கும் விளக்கம் இன்றி நகருகிறது நல்லாட்சி!

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையேயான பனிப்போர் ஆரம்பமாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு அமைவாக ஜி.எல் பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு மாவட்டங்கள் தோறும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களையே அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

தவிரவும் முன்னாள் அதிகாரிகள் புத்தகங்களை எழுதுவதும் அந்த புத்தக வெளியீட்டு விழாக்களில் மஹிந்த ராஜபக்சவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவையும் அழைத்து கௌரவிப்பதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இவற்றைப் பார்க்கின்றபோது படையினர் முன்னாள் ஆட்சியாளர்களின் விசுவாசிகளாகவே இருப்பதான தோரணை தெரிகின்றது. அண்மையில் கொழும்பில் யுத்தத்தில் தமது அங்கங்களை இழந்த இராணுவ வீரர்கள் நடத்திய ஆர்ப்பட்டமானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவ சேவையில் இணைந்து 12 ஆண்டுகள் சேவையாற்றியவர்களுக்கே ஓய்வூதியம் வழங்குவது என்ற நடைமுறை இருந்தபோதும் தாம் 12 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றுவதற்கு முன்னரே யுத்ததில் தமது அங்கங்களை இழந்தவர்கள் என்பதால் தமக்கும் ஓய்வூதியத்தை அரசாங்கம் வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தே அவர்கள் கோட்டை புகையிரதத்;திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

கொட்டும் மழையிலும் வீதியில் நனைந்தபடி அவர்கள் கையில்லாமலும், கால் இல்லாமலும், ஊன்று கோள்களுடன் வீதியில் கிடந்து நியாயம் கேட்டு போராடினார்கள். அதைப்பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

அவர்கள் சிங்களவர்கள், தமிழ் மக்களை கொன்றொழித்த இராணுவத்தினர் என்பதற்கெல்லாம் அப்பால் அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு விஷேடமான தேவைகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரம் சவாலானதுதான்.

யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தரப்புதான் படையினர். மறுதரப்பான முன்னாள் விடுதலைப் புலிகளிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தமது அங்கத்தை இழந்தவர்களாகவும், அங்வீனமுற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களும் கூலி வேலைக்கும்போக முடியாமல், தமது வீட்டியேலே சுய தொழிலிலும் ஈடுபட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தேவைகளுக்காகவும் எவ்விதமான உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தோடு இணைத்துவிட்டோம் என்பதைத் தவிர மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அவர்களுக்காக அர்த்தபூர்வமாக எதையும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறிய மைத்திரி அரசாங்கமும் இதுவரை எந்த உதவித் திட்டத்தையும் செய்யவில்லை.

சிங்கள அரசுகளைப் பொறுத்தவரை யுத்தத்தில் தோற்றுப்போன தமிழர்களுக்கு அரசாங்கம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று ஒரு எண்ணம் உள்ளுர இருக்கக்கூடும்.

ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைகளாக அதிகாரத்துடன் தலைமை வகிக்கும் தமிழர்களின் அரசியல் தலைமைகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களோ, தமிழ் இனத்தின் தமிழரசு என்று கருதப்படும் வடக்கு மாகாண சபையினரோ கூட இதுவரை முன்னாள் விடுதலைப் புலிகளுக்கும், யுத்தத்தில் அங்கங்களை இழந்தவர்களுக்கும், அங்கவீனமாகியிருப்பவர்களுக்கும் எவ்விதமான விஷேட உதவிகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற கவலை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருக்கவே செய்கின்றது.

இந்நிலையில், தமிழ் மக்களோ அல்லது முன்னாள் போராளிகளோ அரசாங்கத்திடம் நீதி கேட்டு கொழும்பு புறக்கோட்டையில் போராட்டம் நடத்த முடியுமா? தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு சிங்கள அரசாங்கங்கள் வரலாற்றின் எக்கால கட்டத்திலாவது நியாயத்தை வழங்கியிருக்கின்றனவா?

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மாணவர்களும் பொது அமைப்புக்களும் ஹர்த்தால் நடத்தியதையும், தமிழ் மக்கள் பொறுமையாக இருந்ததையும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி பெருமையாகக் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

தென் இலங்கையாக இருந்திருந்தால் பெருங்குழப்பங்கள் நடந்திருக்கும், ஆனால் தமிழ் மக்கள் பொறுமையாக இருந்தீர்கள் என்று கூறியிருக்கின்றார். தமிழ் மக்கள் போராடத் தெரியாதவர்களில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார் என்று நம்புவோம்.

ஜனாதிபதி மைத்திரிபாலவைப் பொறுத்தவரை அவரது ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக போராடுவதையும், தொழிற் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராடுவதையும், முன்னாள் படையினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதையும் பெருமையாகவே நினைக்கின்றார்.

அவர் நடத்தும் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு அரசுக்கு எதிராக போராடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகக் கூறுவதை பெருமையாக கூறுகின்றார். அதாவது மஹிந்த ராஜபக்கசவின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்று மக்கள் அரசுக்கு எதிராக வீதியிலிறங்கிப் போராடும் சுதந்திரம் இருக்கவில்லை என்பதுதான் அவரின் நியாயமாக இருக்கின்றது.

நல்லாட்சியில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றது என்பதை பெருமையாக நினைப்பதானது, ‘அவலை நினைத்து உரலை இடித்த கதைதான்’ அதாவது மஹிந்தவை அம்பலப்படுத்துகின்றோம் அல்லது மஹிந்தவுக்கு முடியாததை நல்லாட்சி செய்கின்றது என்று காட்டுகின்றார்களாம்.

மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சிக்கான குணங்கள் இவை அல்ல. யுத்தமில்லாத நாட்டை தொழிற்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் அபிவிருத்தி செய்து கட்டியெழுப்புவதுடன் மக்கள் மீதான வாழ்வாதாரச் சுமைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்பதும், யுத்தம் ஒன்றுக்கான அடிப்படைகளான காரணங்களை கண்டறிந்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் உரிய தீர்வை வழங்கி ஐக்கிய இலங்கைக்கள் இலங்கைப் பிரஜைகள் அனைவரிடத்திலும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவுமே இருக்க வேண்டுமெனவே எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி இந்த ஒரு வருட காலத்தில் பலரை விசாரணைக்கு அழைத்ததையும், சிலரை சிறைகளில் அடைத்து பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ததையும், வரவு செலவில் ஒவ்வொரு பிரஜை மீதும் வரிச்சுமையையும், கடன் சுமையையும் ஏற்றிவிட்டதைத் தவிர வேறு எதையும் குறிப்பிடும்படியாக செய்யவில்லை.

முன்னைய ஆட்சியில் என்னதால் மோசடிகள் நடந்திருந்தாலும், கொள்ளைகள் இடம்பெற்றிருந்தாலும் மக்கள் மன உலைச்சலற்று இருந்ததையும், நாடு அபிவிருந்தி அடைந்ததையும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் உட்கட்டமைப்புகள் புத்துயிரளிக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி தனது கோபத்தையும், அன்பையும் வெளிப்படையாக காட்டுகின்றவராக இருந்தார்.

ஆகமொத்தத்தில் நல்லாட்சியினரோ மர்மமான ஆட்சி முறையையே நடத்துகின்றார்கள். மக்களுக்கும் விளக்கமில்லை. ஆட்சியாளர்களுக்கும் விளக்கமில்லை என்றளவிலேயே நாட்டு நடப்பு நகர்கின்றது.