விச ஊசி பரிசோதனை: ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்!

விச ஊசி விவகாரம் தொடர்பில் பத்தாவது வாரமாகவும் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பரிசோதனையில் முன்னாள் போராளிகள் ஆர்வம் காட்டாத தன்மையே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வடமாகாண சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

அதற்கமைய பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 193 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் செப்ரெம்பர் 2 ஆம் திகதி 26 பேரும், செப்ரெம்பர் 9 ஆம் திகதி 47 பேரும், செப்ரெம்பர் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் 22 பேரும், செப்ரெம்பர் 23 ஆம் திகதி 30 பேரும், செப்ரெம்பர் 30 ஆம் திகதி 21 பேரும், ஒக்ரோபர் 7 ஆம் திகதி 15 பேரும், ஒக்ரோபர் 14 ஆம் திகதி 10 பேரும், ஒக்ரோபர் 21 ஆம் திகதி 14 பேரும், ஒக்ரோபர் 28 ஆம் திகதி 02 பேரும், கடந்த இம் மாதம் 4 ஆம் திகதி 06 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்தும் வெள்ளிக்கிழமைகளில் இம் மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்ற போதும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பதில் முன்னாள் போராளிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை.

இதேவேளை, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான எஸ்.அமலதாஸ் (வயது 46) என்பவர் கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.